திருமதி லாவண்யா எழுதிய இதழில் கதையெழுது...

அத்தியாயம் – 15

அந்த வாரம் சனிக்கிழமை, மதியம் உணவு சாப்பிடவென அங்கிருந்த மாலுக்குச் சென்று உணவருந்திக் கொண்டிருந்தாள் மதுமிதா. அப்போது வீட்டுக்குச் செல்ல விருப்பமில்லை. என்று சந்தோஷைப் பற்றி வீட்டில் தெரிய வந்ததோ அப்போதிலிருந்தே கல்யாணி அவளைத் தனியாக விடுவதில்லை.

அவளிடம் எதையாவது சும்மாவேனும் பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மதுமிதாவுக்கு முக்கியமான வேலையைப் பற்றிச் சற்று யோசிக்க வேண்டியிருந்தது. அதனாலேயே இங்கே வந்தாள்.

மாலுக்கு வந்ததிலிருந்தே கடந்த நான்கு நாட்களாக நடந்தவைகள் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தன.

ஆனந்தினியின் வீட்டிலிருந்து வந்த அன்று மாலையில் ஆனந்தினியிடமிருந்து மதுமிதாவுக்கு அழைப்பு வந்தது. அவளை நேரில் சந்திக்க வேண்டும் என்றதும் உடனே ஆனந்தினியை அவளது வெதுப்பகத்தில் சந்திக்கக் கிளம்பிவிட்டாள்.

அவளுடன் பேசிய பின்னரே மதுமிதாவின் மனப்பாரம் வெகுவாகக் குறைந்தது எனலாம்.

மலர்ந்த முகத்துடன் வந்த ஆனந்தினியிடம் மதுமிதா பலமுறை மன்னிப்புக் கேட்க, இனி ஒருமுறை மன்னிப்புக் கேட்டால் அவளிடம் பேசுவதையே விட்டுவிடுவதாக ஆனந்தினி மிரட்டவும் தான் அமைதியானாள்.

அத்தோடு ஆனந்தினி சொன்ன விஷயத்தைக் கேட்டதும் அவளுக்கு உற்சாகத்தில் குதிக்க வேண்டும் போல் தோன்றியது.

ஆனந்தினியின் சீனியர் ஒருவன் அவளிடம் மனதைத் திறந்து அவளைக் காதலிப்பதையும், அவளை மணந்து கொள்ள நினைப்பதையும் பற்றிச் சொல்லியிருக்கிறான். ஆனந்தினிக்குப் பெரிதாக மறுத்துக் கூற காரணமில்லாததால் அவனைப் பற்றி வீட்டில் பேசிவிட்டுச் சொல்வதாகச் சொல்லியிருந்தாள்.

அதற்குள் அவனுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்க உடனே வீட்டில் சொல்லுமாறு அவளை அவசரப்படுத்தியிருக்கிறான்.

சில வாரங்களுக்கு முன்னால் ஆனந்தினியின் நண்பன் ஒருவன் வெளிநாடு செல்வதை முன்னிட்டு அவள் நண்பர்கள் மதுமிதாவின் வெதுப்பகத்தில் கூடினார்களே? அவன் தான் ஆனந்தினியிடம் மனதைத் திறந்தவன்.

ஆனால் அன்று பரத் மதுமிதாவின் மேலுள்ள கோபத்தில் ஆனந்தினியைக் கையோடு கூட்டிக் கொண்டு போகவும், ஆனந்தினிக்குப் பயம் பற்றிக் கொண்டது. இப்போது போய் இதைப் பற்றிப் பேசினால் பரத் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?

அதனால் சில காலம் காத்திருக்கலாம் என முடிவு செய்து கொண்டாள். ஆனால் அதற்குள் மதுமிதா தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு பெண் கேட்டு வந்துவிட்டாள்.

அவள் சொல்வதை இடையிடாமல் கேட்டுக் கொண்டிருந்த மதுமிதா, “ஓஹ்...” என வாயை குவித் த விதத்தில் ஆனந்தினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

         

“அன்னைக்கு உங்க பேக்கரிக்கு வந்திருந்தாரே... அவர் தான்” என ஆனந்தினி  சொல்ல, பரத் செய்த தவறுக்கு அவன் ஏன் அத்தனை முறை அவளிடம் மன்னிப்புக் கேட்டான் என இப்போது மதுமிதாவுக்கு நன்றாகவே புரிந்தது.

“சொதப்பிட்டேனா...” என அவளைப் பார்த்து மதுமிதா அசடு வழிய,

“என் அண்ணனுக்கு ஏன் உங்களைப் பிடிச்சதுன்னு இப்போப் புரியுது... இப்படிச் சொதப்பி, அசடு வழியறவங்களை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.. நானும் உங்களை மாதிரி தான்...” என்ற ஆனந்தினியின் கண்கள் கலங்கியிருந்தன.

ஆனந்தினி, அவள் அண்ணன் சந்தோஷைப் போல் எவ்வளவு இனிமையானவள்? இந்த பரத் தான் இன்னுமே முரண்டிக் கொண்டிருக்கிறான் என மதுமிதாவுக்குத் தோன்றாமலில்லை.

அவள் மனதைப் படித்தவள் போல், “ஏன் நடந்தது... எதற்கு நடந்தது என ஆராய்ச்சி செய்யாமல் வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்...

அவர் எப்பவும் ஒரு நல்ல மகனா, ஒரு நல்ல அண்ணனா இருந்திருக்கிறார்... பரத் அண்ணனும் அப்படித் தான்... ஆனால்...” எனச் சொன்ன ஆனந்தினி, பரத்தின் கோபத்துக்கான காரணத்தைத் தெரிவித்தாள்.

பரத்துக்கு இந்தியக் குடிமையியல் துறையில் பரீட்சை எழுதி அதில் சேர வேண்டும் என்று கனவு. முதல் முறை இரண்டாம் கட்டத்தில் தோல்வியடைந்து மீண்டும் எழுத நினைக்கையில் சந்தோஷின் மரணம் நிகழ்ந்தது.

அதனால் அவனால் மீண்டும் பரீட்சையை எழுத முடியவில்லை. அத்தோடு நண்பனாக இருந்து ஊக்கப்படுத்திய அண்ணன் உடன் இல்லாமல் போக, அது அவனுள் ஒரு வெற்றுணர்வைத் தோற்றுவித்தது.

அதனால் தான் அவனுக்கு இத்தனை கோபம் என பரத்தைப் பற்றிச் சொன்னாள் ஆனந்தினி.

அதன்பிறகு பெண்கள் இருவருக்கும் பேசுவதற்கு எந்தத் தடையுமில்லை. கூடுதலாக வேறொரு விஷயத்தையும் ஆனந்தினி அவளிடம் தெரியப்படுத்தினாள்.

மதுமிதாவுக்கு அந்த நொடியில் உள்ளுக்குள் பூரண அமைதி நிலவியது. சென்றமுறை சொதப்பிய பின்னரும் தன்னை நம்பி இவ்வளவு பெரிய விஷயத்தை ஆனந்தினி பகிர்ந்து கொள்கிறாள் என்றால் அவள் தன்னை முழுவதுமாக நம்புகிறாள் என்பதே போதுமானதாக இருந்தது.

அதை நினைத்து அமைதி கொண்ட அதே வேளையில், அவள் சொன்ன விஷயத்தை நினைத்து மதுமிதாவின் உள்ளம் பதறியது. ஆனந்தினியே சமீபத்தில் கண்டறிந்த விஷயம் அது.

சென்றமுறை ஓர் அப்பாவி இளைஞனுக்கு எயிட்ஸ் கிருமி தாக்கப்பட்ட இரத்தம் ஏற்றி அவன் வாழ்க்கையில் விளையாடி, அதிலிருந்து அந்த மருத்துவமனை நிர்வாகி, குருமூர்த்தி தப்பித்துக் கொண்டார். ஆனால் இம்முறை அப்படி விடக் கூடாது என்ற உறுதி மதுமிதாவினுள் பிறந்தது.

ஆனந்தினிக்கு முதல் முறையாக இதைப் பற்றின சந்தேகம் வந்தது கடந்த இரண்டு வாரங்களாகத் தான். அவள் தற்போது வேலைச் செய்து கொண்டிருக்கும் மருத்துவமனையில் பிரசவ வார்டும் இருக்கிறது.

அங்கே பிரசவத்துக்கு வந்த பெண்ணின் குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டதாகக் கூறி அக்குழந்தையை உரியவர்களிடம் தராமல் எடுத்துக் கொண்டு போய் ஓர் அட்டைப் பெட்டியில் மூடி வைத்தனர் அங்கே வேலை செய்தவர்கள்.

அந்நிகழ்வு ஆனந்தினியின் உள்ளத்தை மிகவுமே பாதித்துவிட்டது. ஏனோ இறந்த அவள் அண்ணன் சந்தோஷின் முகம் ஞாபகத்துக்கு வர, அக்குழந்தையின் முகத்தைப் பார்க்கலாம் என குறிப்பிட்ட அப்பெட்டியைத் திறக்க முயன்றாள்.

அப்போது அங்கே வந்த குருமூர்த்தி, “இங்கே உனக்கு என்ன வேலை? போ... உன் வேலையைக் கவனி” என அவளை அங்கிருந்து விரட்டிவிட்டார்.

“டாக்டர்.. அது..” என அவள் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்த குருமூர்த்தி, “தேவையில்லாத உணர்வுகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது... நீ ஒரு டாக்டர்.. பிறப்பும் இறப்பும் இயல்பு ” என அவளை அங்கிருந்து வெளியேற்றினார்.

அவர் சொல்வதும் உண்மையென்று அப்போதைக்கு விட்டுவிட்டாள். ஆனால் கடந்த இரண்டு வாரத்தில் இதே போன்று மூன்று இறப்புகள். அப்போது தான் அவளுக்கு மெதுவாகச் சந்தேகம் துளிர்த்தது.

முதலில் இறந்த குழந்தையை எதற்காக அட்டைப் பெட்டியில் வைத்திருக்க வேண்டும். ஒன்று பிணவறையில் வைத்திருக்க வேண்டும், இல்லை, உரியவர்களிடம் சேர்ப்பித்திருக்க வேண்டும்.

அதைப் பற்றிய எண்ணத்தில் உழன்றவளின் சந்தேகம், ஒருநாள் இரவு பணியில் இருந்த பொழுது மேலும் வலுவடைந்தது. இறந்த குழந்தையை வைத்திருத்த பெட்டி வேறொருவரிடம் கை மாறுவதைக் கண்டாள்.

இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தும் முறை இதுவல்லவே. ஏற்கனவே குருமூர்த்தி மேல் கொண்டிருந்த அவநம்பிக்கையும் சேர்ந்து கொள்ள, ஏதோ தப்பு நடக்கிறது என அவள் உள்மனம் எச்சரித்தது.

 

எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கவனித்ததில் எதுவும் பிடிபடவில்லை.

“சந்தோஷ் அண்ணன் வீட்டில் இது மாதிரி நிறையக் கதைகள் சொல்லிக் கேட்டதாலோ என்னவோ எல்லாத்தையும் சந்தேகமாவே பார்க்கத் தோணும் எனக்கு... அதனால் கடந்த ஒரு வருஷமா வந்த பிரசவக் கேஸ்களை எடுத்துப் பார்த்தேன்...

கடந்த ஒரு வருஷத்தில் மட்டும் பதினெட்டுக் குழந்தைகள் இறந்திருக்கு... அதைப் பற்றிய விவரங்கள் எதுவும் என்கிட்டே இல்லை... ஆனால் அந்தக் குழந்தைகளை ஈன்றவர்களின்  முகவரி இருக்கு...  ஏதாவது தப்பா இருந்தா, நீ தான் இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வரணும் மது...” என ஆனந்தினி சொல்லி முடிக்க,

சற்றுநேரம் பேச்செழாமல் அமர்ந்திருந்தாள் மதுமிதா. சொல்லிய விவரங்களைக் கிரகித்துக் கொண்டவள், “என்னை நம்பினதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்... நாளைக்கே ஆரம்பிக்கிறேன்” என ஆனந்தினியிடம் வாக்குத் தந்த மதுமிதா, கடந்த மூன்று நாட்களாக அலைந்து திரிந்து விவரங்களைத் திரட்டி இருந்தாள்.

தீவிரமாக அலசிப் பார்த்ததில் பிரசவத்துக்கு என அனுமதிக்கப்பட்ட பெண்கள், அதுவும் குழந்தை இறந்துவிட்டது எனக் கூறப்பட்ட பெண்கள் அனைவரும் அதிகம் வசதியில்லாதவர்கள் என்ற ஒரே ஓர் ஒற்றுமை மட்டும் இருந்தது.

கூடுதலாக, அவர்களிடம், “பத்திரிக்கைத் துறையிலிருந்து வருகிறேன்” எனச் சொல்லி பேசியபொழுது அவர்கள் அனைவரும் சொன்ன ஒரே விஷயம், ‘அதுவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை... திடீர்ன்னு இப்படி ஆயிடுச்சு...’ என்பது தான்.

அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த மதுமிதாவுக்கு, ‘ஒருவேளை குழந்தைகளின் உறுப்புகளைத் திருடுகிறார்களோ?’ எனத் தோன்ற அடிவயிறு கலங்கியது. ஆனால் பிறந்த குழந்தையின் உறுப்புகள் எந்தளவுக்குப் பயன்படும்?

‘இதே போல் பிறந்த சில நாட்களே ஆன மற்ற குழந்தைகளுக்குப் பயன்படலாம்’ என்றாள் ஆனந்தினி. ‘அதற்காக ஓர் உயிரைக் கொல்வதா? இருக்கக் கூடாது’ என மதுமிதாவின் மனம் பதறியது.

ஒருவேளை குழந்தையையே கடத்துகிறார்களோ என்றும் அவளுக்குத் தோன்ற, அதை ஆனந்தினியிடம் சொன்னாள்.

இருவரும் கலந்துப் பேசி, “அடுத்த முறை இது போல் சற்று வசதி குறைந்த வீட்டுப் பெண் பிரசவத்துக்கு வரும் போது தகவல் சொல்கிறேன்” என்றாள் ஆனந்தினி.

ஸ்ரீராம் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்ன பத்திரிக்கையின் முதல் பக்கச் செய்தியாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் துரிதமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள் மதுமிதா. இந்தச் செய்திக்காக இராப்பகலாக உழைக்கவும் செய்தாள்.

அதனால் கடந்த நான்கு நாட்களாக வேலைக்கும் செல்லவில்லை. இன்னுமே ஸ்ரீராமிடம் அவள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கவில்லை. உடல்நலம் சரியில்லை என்று மட்டும் ஸ்ரீராமிடம் சொல்லியிருந்தாள். அவ்வளவே...

பழைய எண்ணங்களில் இருந்து வெளிவந்த மதுமிதா, அவசரமாக உணவை உண்டு முடித்தாள்.

மதுமிதா கண்டிப்பாகக் கொடுத்த வேலையை முடிப்பாள் என நம்பியதால் அவளைத் தொந்தரவு செய்யவில்லை ஸ்ரீராம். தங்கையின் திடீர் வருகையால், மதுமிதா ஏன் வரவில்லை என்பதை அவனும் ஆராயாமல் விட்டுவிட்டான்.

அத்தோடு ‘நீ அதிக உரிமை எடுத்துக் கொள்கிறாய்’ என மதுமிதா அவனைக் குற்றம் சாட்டி ஒதுக்கவும், சற்று நிதானித்தான். தேவையில்லாமல் அவளுக்கு இடைஞ்சல் தரவேண்டாம் என முடிவும் செய்து கொண்டான்.

அதனால் வேலை நேரம் போகத் தங்கையுடனும், வினோத்துடனும் நன்றாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

அன்றும் அப்படித் தான்.. வினோத்தின் திருமணத்தை முன்னிட்டு எதையோ வாங்க வந்திருந்தார்கள். ஸ்வேதாவும், வினோத்தும் எப்போதும் போல் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க,

ஸ்ரீராம், “நீங்க என்னமோ பண்ணுங்க... எனக்குப் பசிக்குது... நான் போய்ச் சாப்பிடப் போறேன்” என அங்கிருந்து நழுவ முயன்றான்.

“டேய்... எனக்கும் பசிக்குது...” என வினோத்தும் உடன் செல்ல எத்தனிக்க, “ஒழுங்கா எனக்குச் செலக்ட் பண்ணிக் கொடு... உனக்காக யூ.எஸ்.ல இருந்து எவ்வளவு வாங்கிட்டு வந்தேன்?” என அவனை நகர விடாமல் பிடித்துக் கொண்டாள் ஸ்வேதா.

“ஐயோ... வேதாளம் மாதிரி முதுகுல ஏறி டார்ச்சர் செய்யறியே... சரண்யாக்குக் கூடச் செலக்ட் பண்ண இப்படி நான் மெனக்கெட்டதில்லை....” என வினோத் அலறினாலும் அவள் கேட்டதைச் செய்யச் சென்றான்.

“நான் போய் ஆர்டர் பண்ணி வாங்கி வைக்கிறேன்... நீங்க வந்து சேருங்க” என ஸ்ரீராம் நகர்ந்து ‘புட் கோர்ட்’ சென்றான். வேண்டிய உணவினை ‘ஆர்டர்’ செய்துவிட்டு ஒரு டேபிளில் போய் உட்கார இடம் தேட, ஓர் ஓரமாக அமர்ந்திருந்த மதுமிதா கண்களில் பட்டாள்.

நேராக அவளிடம் சென்ற ஸ்ரீராம், “வேலைக்கு வர்றதுக்குத் தான் உனக்கு உடம்பு சரியில்லை போல...” என அவள் முன்னால் புன்னகையுடன் அமர்ந்தான்.

அவனை அந்நேரம் அங்கே எதிர்ப்பார்க்காதவள், “ராம்... அப்படியில்லை... முக்கியமான விஷயம்... நானே உங்களைப் பார்த்துப் பேசணும் என நினைச்சேன்... ஆனா, இப்போ இல்லை... ஆபீஸ்ல பேசலாம். அதற்குள் நானும் கொஞ்சம் உறுதிப்படுத்திக்கிறேன்...” என்றாள்.

ஒரே ஓர் ஆதாரம் கிட்டட்டும்.. அதன் பிறகு அந்தச் செய்தியை எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளியிட்டுவிடலாம் எனக் கருதி சற்று அடக்கி வாசித்தாள். ஏற்கனவே கிஷோரிடம் பட்ட அடி அவளுக்கு ஒரு பாடம் அல்லவா?

“வேலையைப் பத்திப் பேசறதால உன்னைச் சும்மா விடறேன். ஆனா, சாரி... பில்டிங் தான் ரெடியாகக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு....” என்றான்.

பத்திரிக்கையில் வேலைச் செய்யவென மேலும் ஐந்து பேரை இருவருமாகத் தேர்ந்தெடுத்தனர். அனைவரும், தொலைக்காட்சி நிறுவனத்தில் உள்ள ஓர் அறையில் அவரவர் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

“இட்ஸ் ஓகே... வேலையெல்லாம் எந்தத் தடங்கலும் இல்லாமல் போயிட்டு இருக்கு... இப்போதைக்குப் பிரிண்டிங்கும் வெளில தானே கொடுக்கிறோம்....” என்றாள் மதுமிதா.

“உன்னை நம்பி இன்னும் ரெண்டு வாரத்தில் முதல் இதழ்  வெளிவந்திடும் என விளம்பரப்படுத்திட்டேன்.. காப்பத்திடும்மா... ” எனக் கையெடுத்துக் கும்பிட, அவன் சேட்டையில் சிரித்துவிட்டாள்.

அபயம் அளிப்பது போல் அவளும் பாவனை செய்ய, கடந்த ஐந்து நாட்களாக அவர்களுக்கு இடையே விழுந்திருந்த மெல்லிய திரை விலகியது.

“ஆமா, உன் அண்ணனுக்குப் பொண்ணு பார்க்கப் போனீங்களே, என்ன ஆச்சு?” என ஸ்ரீராம் ஞாபகம் வந்தவனாகக் கேட்டான்.

மதுமிதா ஏற்கனவே அவள் அண்ணனுக்குத் திருமணம் கூடி வருவதைப் போலிருக்கிறது எனக் கூறியிருந்தாள். பெண்ணும், பையனும் பார்த்து, ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசுவோம் என்றும் சொல்லியிருந்தாள்.

அவள் அண்ணனுக்குத் திருமணம் முடிந்துவிட்டால் அடுத்து இவள் திருமணத்தைப் பற்றி யோசிப்பார்களே அவள் வீட்டில். அதனால் அவனும் தயாராக இருக்க வேண்டுமல்லவா? என்ற தொலைநோக்குப் பார்வையில் தான் அதைப் பற்றிக் கேட்டான் ஸ்ரீராம்.

“ப்ச்... வொர்க் அவுட் ஆகலை...” என மதுமிதா உதட்டைப் பிதுக்க, “இட்ஸ்.. ஓகே... எல்லோரும் என்னை மாதிரி நல்லவங்களா இருக்க மாட்டாங்க... நான் க்யூல இருக்கிறது ஞாபகம் இருக்கா?”எனச் ஸ்ரீராம் கேட்க, அதுவரையில் இருந்த இலகுத் தன்மை மாறிவிட்டது.

மதுமிதா பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து, அவள் தட்டை வெறிக்க,

“மது, இன்னைக்குப் பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடணும்.... நல்லா இருக்காச் சொல்லு.... ஒருத்தர் தன் பெண்ணுக்குப் பெரிய அளவில் கல்யாணம் பண்ணி வைச்சார்... ஆனா அந்தக் கல்யாணத்தில் ஒரே எறும்புத் தொல்லை.. ஏன் தெரியுமா?” என ஸ்ரீராம் கேட்க, பேச்சை மாற்றுகிறான் என அவளுக்குப் புரிந்தது.

ஆனாலும் அதற்கு அவள் பதில் சொல்லவில்லை...

“ஏன்னா, அவர் தான் ஜாம்.. (jam) ஜாம்ன்னு கல்யாணம் பண்ணி வச்சாரே....” என்ற அவனின் பதிலில் அவளையும் மீறி மதுமிதாவுக்குப் புன்னகை எட்டிப் பார்த்தது.

“பரவாயில்லையே... அதுக்குள்ளே இன்னொருத்தனைப் பிடிச்சுட்டியா? உனக்கென்ன? சந்தோஷமா உன் வாழ்க்கையைப் பார்த்துப் போயிட்டு இருப்பே...” என்ற குரலில் மதுமிதா திரும்பிப் பார்க்க, பரத் நின்று கொண்டிருந்தான்.

‘யாரடா இவன்?’ என ஸ்ரீராம் அவனை யோசனையுடன் பார்க்க, அவன் மதுமிதாவை முறைத்துக் கொண்டிருந்தான். அவன் முகம் ஏனோ பரிச்சயமானத்தைப் போலிருந்தது. ஆனால் யாரென்று ஸ்ரீராமுக்குத் தெரியவில்லை.

வந்தவனைப் பார்த்தால் ரௌடி போலெல்லாம் தெரியவில்லை. பார்க்க டீசென்ட்டாகவே இருந்தான்.

ஸ்ரீராம் மீண்டும் மதுமிதாவைத் திரும்பிப் பார்க்க, அவள் எழுந்து நின்றிருந்தாள். அவன் சொன்னதைக் கேட்டு முகத்தில் எவ்விதக் கோபத்தையும் காட்டாமல் வெறித்த பார்வையுடன் அந்த இளைஞனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மதுமிதா எதிர்த்து எதுவும் பேசாமல் இருந்தாலும் ஸ்ரீராமால் அப்படி இருக்க முடியவில்லை. தேவையில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறான் என, “என்ன பிரச்சனை உங்களுக்கு? போய் உங்க வேலையைப் பாருங்க” என்றான்.

“நீங்க அடுத்து சாக ரெடியா?” எனப் பரத் கேட்க, “பரத்... என்ன பேச்சு இது?” என அவனை அதட்டினாள் மதுமிதா.

‘தெரிந்தவனா?’ என்பதைப் போல் மதுமிதாவைப் பார்க்க, அவளோ அந்த ‘பரத்’தை என்ன செய்வது என்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவர் செத்தா உனக்கென்ன? வேறொரு ஆள்ன்னு போயிட்டே இருப்ப தானே?” என பரத் முடிக்கும் முன்னால் அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை வைத்திருந்தாள் மதுமிதா.

“பேசாத... இத்தோட நிறுத்திக்கோ... சந்தோஷோட தம்பியாச்சேன்னு பார்க்கிறேன்... இல்லை...” என ஒற்றை விரல் நீட்டி அவனை எச்சரித்தவள்,

“என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியும்... நானும் இங்கே மரண வேதனையில் துடிச்சுட்டு இருக்கேன்... நீயும் ஏண்டா என்னை இப்படி ‘டார்ச்சர்’ பண்ணற? என்னால் நிம்மதியா கண் கூட மூட முடியலை...” என்றவளின் கண்கள் கலங்கியிருந்தன. அதை விட அவள் குரல்...

வந்தவன் சந்தோஷின் தம்பி என்றதுமே ஸ்ரீராமுக்கு அனைத்தும் புரிந்து போயின. வேதனையில் மதுமிதாவை வார்த்தைகளால் பதம் பார்க்கிறான் பரத். ஆனாலும் அவன் அண்ணனின் மரணத்துக்கு மதுமிதாவைக் காரணம் காட்டுவது சற்றும் நியாயமில்லை.

“மது, அழாத...” என ஸ்ரீராம் அவளை நெருங்கிச் சமாதானப்படுத்த முயல,

“எல்லாம் உங்களால் வந்தது.... தனியா உட்கார்ந்துட்டு இருந்தேனே... விட்டுட்டுப் போக வேண்டியது தானே? முதல்ல இங்கிருந்து கிளம்புங்க... வேலையைப் பத்தி பேசறதா இருந்தா ஆபீஸ்ல பேசுங்க... இனிமேல் வெளியில பார்த்தா துரத்திட்டு வராதீங்க...” எனக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அதையும் மீறி கண்களில் கண்ணீர் வழிய, “நான் நிம்மதியா இருக்கறது யாருக்குமே பிடிக்கலையா? ஏற்கனவே பைத்தியமாகிச் சுத்திட்டு இருக்கேன்...

இவன் ஒரு பக்கம் டார்ச்சர்ன்னா... நீங்க மறுபக்கம் டார்ச்சர்... நான் செத்தாத் தான் உங்களுக்கு எல்லாம் நிம்மதியா இருக்குமா? போறேன்...” எனப் படபடவென்று பொரிந்தாள் மதுமிதா.

மதுமிதாவின் கோபத்தின் அளவைப் பார்த்து பரத் வாய் பிளந்து நின்றான். எது சொன்னாலும் இதுவரையில் எதிர்த்து  எதுவும் பேசாததால் அவள் மேலே தப்பிருக்கிறது என்றே நம்பினான்.

ஆனால் அவளின் இந்தக் குமுறலைக் கேட்டதும், ‘இவளைத் தேவையில்லாமல் அதிகமாகக் காயப்படுத்திவிட்டோமோ?’ எனப் பரத்துக்கு முதல் முதலாக உறைக்க ஆரம்பித்தது.

‘இவள் நல்லவள் இல்லையென்றால் தன் அண்ணனின் அன்புக்கும், காதலுக்கும் எப்படி உரியவளாகியிருப்பாள்?’ எனப் பரத் அலசலில் ஈடுபட்டிருக்க, ஸ்ரீராமும் வேறொரு அலசலில் இருந்தான்.

மதுமிதா மீண்டும் சந்தோஷின் நினைவுகளில் தேய்ந்து போவதற்கும், தேவையில்லாமல் அடிக்கடிக் கோபப்படுவதற்கும் காரணம் இந்தப் பரத் என நொடியில் ஸ்ரீராமுக்குப் புரிந்து போனது.

பார்க்கும் பொழுதெல்லாம், ‘வேறு ஒருவனைப் பிடித்துவிட்டாய்’ எனக் குற்றம் சுமத்தியிருக்கிறான். பரத் இப்படிக் குத்திக் குதறிக் கொண்டிருப்பதால் தான் அவனிடம் கூட இயல்பாகப் பேச மறுக்கிறாள் என அவளது ஒதுக்கத்துக்கான காரணத்தை ஊகித்தும்விட்டான் ஸ்ரீராம்.

படபடவென்று பொரிந்த மதுமிதாவோ சற்றும் தாமதியாமல், விடுவிடுவென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

பரத்திடம் திரும்பிய ஸ்ரீராம், “ஏன் இப்படி நடந்துக்கறீங்க? என்ன நடந்ததுன்னு தெரிஞ்சும் இப்படிப் பேசறது சரியில்லை.” என்றான்.

பரத்துக்கு ஸ்ரீராமை முதலில் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவனைப் பார்த்த சில நிமிடங்களில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகிறவன் எனப் புரிந்து கொண்டான். அவன் தங்கை ஆனந்தினி இவனின் பரம விசிறி.

அதனாலேயே ஸ்ரீராம் பேசப், பேச அவன் வாயே திறக்கவில்லை.

அத்தோடு பரத்தும், இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கவில்லை. அவன் தங்கையின் திருமணம் மீண்டும் தடைபட்டுவிட்டதே என்ற வேதனை. அக்கம் பக்கத்தினரின் வாயில் மீண்டும் அரைபடுகிறோமே என்ற வலி.

 வாழ்க்கைத் தலைகீழாக மாறிவிட்டதை நினைத்து வெறுமை. என்ன செய்வதென்று தெரியாத கலக்கம். அனைத்தும் சேர்த்து அவனை அப்படிப் பேச வைத்தது.

அவன் படித்து முடித்து இனி தலையெடுத்து அவன் குடும்பத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும். அதற்கு அவனிடம் நம்பிக்கையும் இல்லை.... தைரியமுமில்லை... அண்ணன் விபத்தில் இறந்ததும், அந்தத் துக்கத்தைத் தாங்க முடியாமல் தந்தை இறந்ததும் அடுத்தடுத்து நிகழ்ந்துவிட்டது.

அதனால் நடக்கவிருந்த தங்கையின் திருமணத்திலும் தடங்கல்... தொடர்ச்சியாக அடி வாங்கியதால் அன்னையும் உருக்குலைந்து போனார்.

அவனுக்குத் தன் அண்ணன், சந்தோஷின் காதலைப் பற்றியும், மதுமிதாவைப் பற்றியும் அவன் இறந்த சில நாட்களிலேயே தெரிய வந்தது. அண்ணனின் நண்பன் விக்னேஷ் சொல்லியிருந்தான். சந்தோஷின் கைபேசியில் இருந்த புகைப்படங்களும், குறுஞ்செய்திகளும் சாட்சியாக இருக்க விக்னேஷாலும் மறைக்க முடியவில்லை.

ஆனால் சமீபத்தில் தான் பரிசாகக் கொடுத்த கைபேசியை மதுமிதா பிடிக்கவில்லை என்று சொன்னதால் அதை மாற்றி வரச் சென்றான் சந்தோஷ் என்றும், அப்போது தான் விபத்தில் சிக்கிக் கொண்டான் என்றும் பரத்துக்குத் தெரிய வந்தது.

நடந்தது திட்டமிட்ட கொலை என்று தெரிந்தாலும் அன்று மதுமிதா அவனை அப்படி அனுப்பப் போய்த் தான் விபத்தில் மாட்டிக் கொண்டான் அண்ணன் எனப் பரிபூரணமாக நம்பினான் பரத்.

எப்பேர்ப்பட்டவன் தன் அண்ணன். அவனுக்கு இப்படிப்பட்ட முடிவா வரவேண்டும்? அவனால் தாள முடியவில்லை.

அதனால் துக்கம் தொண்டையை அடைத்து வெளிவர முடியாமல் திணறும் பொழுதெல்லாம் மதுமிதாவைத் தேடிப் போய்த் திட்டினான். அப்படியும் அவன் மனம் அமைதி கொள்ளவில்லை.

இன்று ஸ்ரீராம் உடன் இருக்கையிலேயே,பரத்தின் பேச்சு அத்து மீறியது. அதை மதுமிதவால் தாங்க முடியவில்லை என்பதை அவள் சிதறிய வார்த்தைகள் உணர்த்தின.

“மதுமிதா எங்கிட்டே வேலை பார்க்கிறாங்க... அவங்களைப் போய்.... ச்சே..” என மதுமிதாவைப் பிடிக்க அவளைத் தொடர்ந்து ஓடினான் ஸ்ரீராம்.

மதுமிதா, பரத்திடம் பேசிவிட்டு வந்துவிட்டாளே ஒழிய அவளால் மனதில் தோன்றும் நடுக்கத்தைத் தடுக்க முடியவில்லை. கால்கள் அனிச்சையாக நடக்க, மனம் அவள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இல்லை.

தினமும் தொடரும் இந்தத் தொல்லையிலிருந்து தனக்கு விடுதலை கிட்டினால் நன்றாக இருக்கும். அதற்கு ஒரே வழி அவள் இந்த உலகத்தில் இருக்கக் கூடாது.

எண்ணம் உதித்த அடுத்த நொடி, எஸ்கலேட்டரில் கால் வைத்து முன்னேற நினைக்க, அவள் கால்களை எதுவோ இடறிவிட்டது. பிடிமானம் கிடைக்காமல் பல படிகள் உருண்டு தலைகுப்புற கீழே விழுந்திருந்தாள்.

மேலிருந்து விழுந்ததால் உருண்டு, புரண்டு போய்க் கடைசிப் படியில் மோதி இருந்தாள்.

அவளைத் தொடர்ந்து வந்த ஸ்ரீராம் அதைப் பார்த்துப் பதறி, ‘மது...’ என அவளிடம் ஓடினான். அசுர வேகம் தான். அதற்குள் அங்கிருந்த ஒருவன் எஸ்கலேட்டரின் எமெர்ஜென்சி ஸ்விட்சை தட்டி நிறுத்தியிருந்தான்.

கீழே விழுந்திருந்த மதுமிதாவை வாரித் தன் மடியில் சாய்த்து, “மது... மது” எனக் கன்னத்தைத் தட்டினான் ஸ்ரீராம். மயக்கம் அவளை மெல்ல உள்ளே இழுத்துக் கொண்டது.

ஸ்ரீராமின் சத்தத்தில் ஓடி வந்த பரத், மதுமிதாவின் நிலையைப் பார்த்துத் திகைத்து நின்றான்.