மீட்டாத வீணை

சாரதா ஸ்ரீநிவாசன்

D:\GEETHA\meetatha veenai pic.jpeg

அந்தக் கூடம் தடபுடலாக இருந்தது. அவனுடைய உடல் அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்தது. சுற்றியும் சங்கீத கலா ரசிகர்கள் சங்கீத சபாவின் உரிமையாளர்கள் மற்றும் சங்கீத மேதைகள் எல்லோரும் அமர்ந்திருந்தனர். அவனுடைய உடலின் அருகிலேயே மடியில் வீணையுடன் இருந்த சுமா மெதுவாக தன் கைகளால் அதன் நரம்புகளை மீட்டி அந்த கானம் அவன் காதில் புகுந்து எழுந்து விடமாட்டானா என்பது போல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்து விட்டது என்பது நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

இதோ அவன் கிளம்ப எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். ஆனால் சுமா அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அவளுடைய கண்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. யாராவது அவனை எழுப்பி உட்கார்த்தி விட மாட்டார்களா என்பது போல் பார்த்து ஒவ்வொருவரையும் பரிதாபமாக பார்த்தாள்.  இதோ மூன்று வருடத்துக்கு முன் இதே நாளில் தானே அவன் முதல் முதலாக சபாவில் அவள் முன்னே வந்து அமர்ந்தான். அவளது நினைவலைகளில் குமிழ் வட்டம் இட்டது.

அவனை அவள் சந்தித்தது அந்த கச்சேரியில் தான். முன் வரிசையில் அமர்ந்து இருந்த அவன் மிகவும் வசீகரமாகத் தெரிந்தான். எதோ ஒரு காந்த சக்தி அவனை அவளிடம் இழுத்தது. அவள் மட்டும் செல்ஃப் கண்ட்ரோல் இல்லாதவளாக இருந்து இருந்தால் அந்த கச்சேரி சொதப்பலில் முடிந்து இருக்கும். பேர் கெட்டும் போய் இருக்கும். ஒரு வழியாகக் கச்சேரி முடித்து முழுக்க முழுக்க அவனைப் பற்றிய நினைவுகளுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

அதிலிருந்து ஒவ்வொரு கச்சேரிக்கும் அவன் வருவதும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் அவளிடம் உற்சாகம் தொற்றிக் கொள்வதும், வழக்கமானது.  கச்சேரிக்கு கச்சேரி அவள் சங்கீதம் மெருகேறி கொண்டு இருந்தது. அவன் ஒருமுறை நேயர் விருப்பத்தில் தமிழிசைப் பாடல்கள் கேட்க அவள் அந்த வகையில் மிகவும் கவனம் செலுத்தத் தொடங்கி அவைகளையும் தனது நிரவல்களில் சேர்த்துக் கொண்டாள். அவளது சங்கீத ஞானம் நாடு முழுவதும் பேசப்பட்டது.

தேசிய விருதுக்கு அவள் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இத்தனை சின்ன வயதிலேயே என்று எல்லோரும் பொறாமைப்படும் படியாக விருதும் அவள் கைகளில் வந்து சேர்ந்தது.

அன்று கச்சேரியின் முடிவில் அவன் தானாக வந்து அவனை அறிமுகப்படுத்திக் கொண்டான் ரங்கன். அவனிடம் சிறிது நேரம் பேசியவளுக்கு அவனைப் பற்றிய பிரமிப்பு அதிகமாகியது. சங்கீதத்தை இத்தனை சிறு வயதிலே கரைத்துக்  குடித்து இருந்தான். அவளின் வாசிப்பின் சில இடங்களை அவன் சிலாகித்துப் பேசும்போது அவள் விழிகள் வியப்பால் விரிந்தது.

ஒரு பத்து பதினைந்து கச்சேரிக்குப் பிறகு வயது அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்து இருவருக்குமே ஒருவர் மேல் மற்றவருக்கு இருந்த ஈர்ப்பு காதலாக மாறியது. உண்மையில் அது தெய்வீகக் காதல். அசிங்கங்கள் தோன்றாத அழகான காதல். உடலின் தோலையும் சதையையும் தாண்டி இதயத்தைத் தொட்ட காதல் என்பது அவனின் கணிப்பு. இருவரும் பேசி முடிவில் வாழ்க்கையில் இணைவது என்ற முடிவு செய்ய பெற்றவர்கள் சம்மதத்துடன் இனிதே முடிந்தது திருமணம்.

திருமணத்திற்குப் பின் அவன் அவளையும் அவளது வீணை வாசிப்பபையும் பலமடங்கு காதலிக்க தொடங்கி இருந்தான். அவனுக்கு அவள் வீணை மீட்டும் போது தெரிந்த வெண்டைப் பிஞ்சு போல பளிச் என்றிருந்த விரல்களை விட அதன் மீட்டுதலினால் வந்த சங்கீதத்தின் மேல் காதல் அதிகம் ஆகியது.

அவள் அவனின் காதலை அனுபவிக்க காத்து இருந்தாள். அவன் அவளின் ஒவ்வொரு அங்க அசைவிலும் அவளின் சங்கீதத்தை மட்டுமே பார்த்தான். திருமணமான பின் அவள் அவனுக்காக ஏங்கினாள். அவன் மனம் அவள் மீட்டும் வீணை ஒலிக்கு அடிமையாக இருந்தது.  அவனுக்கு அவள் மேல் காதல் இருந்தது. அது மனிதக் காதலையும் தாண்டி தெய்வீக காதலாக இருந்தது.

திருமணமான முதல் வாரம். மற்ற பெண்கள் போல் அவளும் யாருமில்லாத தனிமையில் அவனுடன் கண்காணாத இடத்திற்குப் போய்த் தன் காதலைச் சொல்லலாம் என்றால் அவன் தனிமையில் அமர்ந்து அவளை வீணை வாசிக்க சொல்லி கேட்டு கொண்டு இருந்தான்.

தனிமை கிடைத்த நாட்களிலும் அதுவே தொடர்ந்தது.

திருமணமாகி மூன்று வருடங்களுக்குப் பிறகு பெண்ணாகப் பிறந்த அவள் தன் விருப்பங்களை ஒரு ஸ்டேஜில் சொல்ல மனம் திறந்த போது அவனின் பதில் அவளுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

"இதோ பாருங்க சுமா! முதன்முதலில் உங்கள் கச்சேரிக்கு வரும்போது நானும் ஒரு சராசரி ஆணாகத்தான் வந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் கச்சேரியைக் கேட்கக் கேட்க அந்த சரஸ்வதியே அவதாரம் எடுத்து வீணை முன் அமர்ந்து வாசிப்பது போல எனக்கு தோன்றியது. மீட்டிய விரல்கள் ஒவ்வொரு நிமிடமும் என்னை அந்த சரஸ்வதி தேவியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. அதில் வரும் கானம் என்னை ஏதோ ஒரு அற்புத உலகத்துக்கு இழுத்து சென்று கொண்டிருந்தது. அதனால்தான் உங்களுடைய ஒரு கச்சேரி விடாமல் நான் அங்கு முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சொல்லப்போனால் ஒரு கடவுளுக்கு ஒரு பக்தன் எப்படியோ அது போல தான் உங்களுக்கு நான்" என்றான்.

சுமாவிற்கு அவனுடைய பதில் அதிர்ச்சியை தந்தது. "உங்கள் அளவில் உங்கள் நினைப்பு சரி. ஆனால் நீங்கள் என்னிடமும் இதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே! உங்களுக்கு வேணா நான் சரஸ்வதி தேவியாகத் தெரியலாம். ஆனால் நீங்கள் எனக்கு பக்தனாக தெரியவில்லையே! நான் எப்பொழுதுமே உங்களை என்னுடைய கணவனாக ஏழேழு ஜென்மத்துக்கும் எனது அருகில் இருப்பவனாகக் கற்பளை செய்து கொண்டிருக்கிறேன். அந்தக் கற்பனையில் இருந்து நான் எப்படி வெளியே வருவது" என்றாள்.

"தவறுதான் சுமா, உங்களிடம் நான் சொல்லி இருக்க வேண்டும்.  ஆனால் இதை நான் சொல்லி விட்டு நீங்கள் மறுத்து இருந்தால் உங்கள் அருகிலேயே எந்நேரமும் இருக்கும் இந்த சந்தோஷம் எனக்கு கிடைக்காமல் போயிருக்கும். அதனால் தான் நான் அதைக் கேட்காமல் இருந்தேன். உண்மையிலேயே அது என் சுயநலம் தான். ஆனால் அந்த சுயநலம் தோற்றுவிடக்கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருந்தேன்" என்றான்.

சுமா இன்னொன்று சொல்ல வேண்டும், உண்மையிலேயே நீங்கள் சங்கீதத்துக்கு உங்களை அர்ப்பணித்தவர்கள். ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நம் இருவருக்கும் இருக்கும் இந்த உறவு நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெய்வீகக் காதலாகத் தான் தெரியும். உண்மை அதுதான்" என்றவனின் பதில் அப்போதைக்கு அவள் மனதை மிகவும் துன்பப்படுத்தியது. மேலே எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தவள் நேராக மாடியில் தன் ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

எப்பொழுதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவளுக்குத் துணை அவளது வீணை மட்டும்தான். அதோடு அமர்ந்து அவள் வாசிக்கும் அந்த நேரம் அவள் தன்னை மறந்து போவாள்.  அப்படித்தான் அன்றும் வாசித்தாள்.

ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தவள் தனது நினைவலைகளை பின்னோக்கித் திருப்பினாள். அவனைச் சந்திக்கும் முன் இருந்த அவளுடைய சங்கீதத்திற்கும் அவனை சந்தித்த பின் இருக்கும் அவளுடைய சங்கீதத்திற்கும் உள்ள வித்தியாசம் அவளுக்குப் புலப்பட அவள் அதிர்ந்தாள். ஆம் உண்மையிலேயே அப்படித்தான். அவனை அந்தக் கச்சேரியில் சந்தித்த அந்த நாளுக்குப் பிறகு ஒவ்வொரு முறை அவனைப் பார்க்கும்போதும் அவளுடைய வீணை வாசிப்பு மெருகேறிக் கொண்டே இருந்தது என்பது என்னவோ உண்மை. இப்பொழுது அவருடைய வீணை வாசிப்பிற்கு யாருமே இணை கிடையாது என்ற நிலைமையில் வந்து நிற்கிறாள். இதற்கெல்லாம் முற்றிலும் காரணம் நிச்சயம் அவன் தான். அது மட்டும் ஒத்துக் கொண்டு ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது அவள் மனதுக்கு. ஆனாலும் அவன் சொன்ன பதிலை அவளால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை, யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி தான் வந்தது.

அவளுக்கு நிம்மதியைத் தரக்கூடிய ஒரே விஷயமான வீணையைக் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள். 'துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' இந்தப் பாடல் அங்கிருந்து மிதந்து வர வர கதவிற்கு வெளியே இருந்த அவனின் உடலில் நுழைந்து எலும்புகளை நொறுக்கி அவன் கண்களில் கண்ணீர் வடிய செய்தது சுமா என்று கூப்பிடத்தான் நினைத்தான்.

அவள் விணையில் அந்தப் பாடலை வாசிக்க வாசிக்க அவன் மனது கலங்கியது. இந்தப் பெண்ணின் வாழ்வை வீணடித்து விட்டோமோ என்று அவன் மனம் கலங்கியது. அவனால் அதைத் தாங்கவே முடியவில்லை. அப்படி அவனுடைய அந்த எண்ணம் மேலோங்க மேலோங்க அவனுடைய இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அளவுக்கு மிஞ்சித் துடித்த இதயம் 'ஆகா போதும்டா வாழ்ந்தது, அவளை நிம்மதியாக வாழ விடு' என்று சொன்னது போல இருந்தது.

அவனுடைய கண்கள் கண்ணீரால் குளம் கட்டியது. அவனுடைய மூச்சு மிக விரைவாக வெளிவர ஆரம்பித்தது. மற்ற நாள் வருவது போல் இல்லாமல் மிக மிக வேகமாக வெளிவர வெளிவர அவனுக்கு ஒரு சந்தேகம். தான் சுமாவை விட்டு போய்விடுவோமோ என்று. "சுமா, சுமா" என்று கத்தத் தொடங்கிய அவன் சத்தம் வெளியே வரவே இல்லை. எத்தனையோ முயன்றும் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிட முடியாமல் கால்கள் துவண்டு மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே வர ஏதோ ஒரு துன்பம் வரப்போகிறது என்ற உள்ளுணர்வில் கண்ணை திறந்து பார்த்தவள் மேல் சரிந்தவன் வீணையின் மேல் பாதியும் சுமாவின் மேல் மீதியுமாக விழுந்தான். அவன் கைகள் இரண்டும் சுமாவை இறுகக் கட்டியிருக்க அவனுடைய முகம் சுமாவின் முகத்தருகே.

இப்பொழுது அவன் சிரித்தான். "சுமா நான் கொடுக்கும் முதலும் கடைசியுமான முத்தம். உன் பெண்மையைத் திருப்திப் படுத்த நான் குடுக்கும் ஒரே ஒரு பரிசு இதுதான்" என்று சொல்லி அவளின் இரு கைகளையும் தன் உதட்டருகில் கொண்டு போய் முத்தம் இட்டான். "என்னை மன்னித்துவிடு. எந்த காரணத்திற்காகவும் வீணை வாசிப்பை உன் இறுதி மூச்சு உள்ளவரை விடமாட்டேன் என்று சத்தியம் செய்" என்ற அவன், கதறலுக்கு பதிலாக அவள் கைகளை அவன் கையில் வைத்து சத்தியம் செய்தாள்.

சரிந்தவனை சுமா இறுக்கிப்பிடித்து, "ஐயோ போய் விடாதீர்கள். நீங்கள் இல்லை என்றால் என் சங்கீதம் போய்விடும். எனக்கு என் சங்கிதமும் நீங்களும் நான் உயிர், இந்த பாழாய்ப் போன உடலுக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்று எனக்கு புரிய வைத்து விட்டீர்கள், தயவு செய்து என்னை விட்டுப் போய் விடாதீர்கள்" என்று அவள் அரட்ட அரட்ட அவள் மடியிலேயே அவன் தலை சரிந்தான்.

''நேரம் ஆயிடுத்து எல்லோரும் காத்துண்டு இருக்கா, போன உயிரை இப்படி கூடத்தில் போட்டு தவிக்க வைப்பது தப்பு. சுமா எழுந்திரும்மா" என்ற அப்பாவின் குரல் அவளை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது.

அந்த வீணையை சுமாவின் விரல்கள் தடவிக் கொண்டு இருந்தது எத்தனை கச்சேரிகள் எத்தனை எத்தனையோ ஜாம்பவான்களுடன் அமர்ந்து வாசித்தது அவள் கண்களின் முன் வந்து போனது.  எத்தனை சபாக்கள் அவள் கச்சேரிக்காகப் போட்டி போட்டது. அவள் அம்மா அப்பாக்கு அவளை நினைத்து அவ்வளவு பெருமை. அதையெல்லாம் நினைத்த அவள் கையெடுத்து கும்பிட்டு கடைசி முறையாக அவனுக்கு பிடித்த ஒரு பாடலை வாசிக்கிறேன் பிளீஸ் என்றவள் வேக வேகமாக அவனுக்கு பிடித்த கரகரப் பிரியாவில் அமைந்த 'ராமா நீ ஏ டா பிரேம ரஹிதுலக்கு நாம ருச்சி தெலுசுனா' வாசிக்க ஆரம்பிக்க கூடமே அந்த சங்கீதத்தில் கட்டுண்டு மெய் மறந்து கண் மூடி நிற்க தீடீரென சங்கீதம் நின்ற நிசப்தத்தில் எல்லோரும் கண் விழிக்க சுமாவின் விரல்கள் ரத்தத்துடன் அந்த வீணை நரம்புகளை விட்டுக் கடைசி முறையாக இறங்க அவளது வீணை அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருக்க அவள் அவனின் வலது புறத்தில் யாருமே கிடத்தாமல் தானாகவே விழுந்திருந்தாள். அவளது இடது கைகளின் விரல்கள் அவளது வீணையயும் தாண்டி அவனது விரல்களைத் தேடிப் பிடித்து இருந்தது, அவர்களுக்கு இடையில் இருந்த அந்த மீட்டாத வீணை அவர்களது தெய்வீக காதலுக்கு சாட்சியாக அங்கே நடு நாயகமாக வீற்றிருந்தது.