நம்மிடமே இருக்கு மருந்து! - கற்றாழை!

Aloe vera Courtesy Dinamalar:

இயற்கை பொருட்களிலேயே கலப்படம் செய்யும் இக்காலத்தில், இயற்கை தன்மை மாறாமல் சில பொருட்கள் கிடைக்கின்றன; அவற்றில் ஒன்று தான், கற்றாழை. 'அலோவேரா' என்று அழைக்கப்படும் கற்றாழையை, குமரி, கன்னி என்று கூறுகின்றனர், சித்தர்கள். காரணம், என்றும் இளமையோடு இருக்க உதவுவதால் தான், இதற்கு இப்பெயர்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என, பல வகை உண்டு. இதில், சோற்றுக் கற்றாழை மட்டுமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

இதை, 'மருத்துவ உலகின் ராணி' என்று அழைக்கின்றனர், சித்த மருத்துவர்கள். 17ம் நுாற்றாண்டு முதலே அழகு பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, கற்றாழை.

நன்கு வளர்ந்த கற்றாழையின் தண்டுகளை ஒடித்து, தோல் சீவினால் உள்ளே நுங்கு போல காணப்படும். இதை, சோறு என்று கூறுவர். இதில், உள்ள, 'அலாய்ன்' எனும் பொருளில், 'ஆன்டி ஆக்சிடன்டு'கள் அதிகம் இருப்பதால், பல நோய்களுக்கு, மருந்தாக பயன்படுகிறது.

மேலும், சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

கற்றாழை சாறு, உடலுக்கு குளிர்ச்சி தரும்; தீக்காயம், சவரம் செய்யும்போது ஏற்படும் கீறல்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கும் கற்றாழை கூழை பூசலாம். கற்றாழை சோற்றை முகத்தில் பூசி கழுவி வர, ஈரப்பதம் மாறாமல் இளமையுடன் இருக்கும், முகம்.

கற்றாழையின் கூழை வெய்யிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்தோ அல்லது அதன் ஜெல்லை தலையில் தேய்த்து குளித்தாலோ, கூந்தல் நன்றாக வளரும்.

கற்றாழை சோற்றை சில நிமிடங்கள் கண்கள் மீது வைத்து வர, கண் எரிச்சல் குணமாகும்; மூல நோய், வாய்வு தொல்லைக்கும் இது சிறந்த மருந்து.

சருமத்தில் உள்ள, 'கொலாஜன்' எனப்படும் கொழுப்பு திசுவை குறைக்கக் கூடிய புரோட்டீன், கற்றாழையில் அதிகம் காணப்படுவதால், முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றத்தை மாற்றுகிறது.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் வெய்யில் பாதிப்பால் உலர்ந்த சருமம் போன்றவற்றுக்கு சிறிது கற்றாழைச் சாறை தினமும் பூசி வர, நல்ல குணம் கிடைக்கும்.

உஷ்ணத்தை உள்ளிழுத்து, குளிர்ச்சியை வெளிக்காட்டும் பண்பு கற்றாழைக்கு உள்ளது. இதனால் தான், கற்றாழையை வீட்டு வாசலில் கட்டி வைத்தால், கண் திருஷ்டி நீங்கும்!

- எம்.விக்னேஷ்