திருமதி லாவண்யா எழுதிய இதழில் கதையெழுது...

அத்தியாயம் - 5

கடற்கரையில் அலைகளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் மதுமிதா. கடந்த ஒரு வாரமாக, ஆனந்தினியின் வீட்டுக்குச் சென்று வந்ததிலிருந்து, வேலை முடிந்ததும் நிம்மதியின் வாசத்தைத் தேடி கடற்கரையே அவளின் வாசமாகிப் போனது.

மீண்டு விட்டோம்  என நினைத்தாள். முன்போல் கலகலப்பாக இல்லாவிடினும் ஏதோ சற்றுச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். நித்தமும் அவள் நினைவில் வந்து ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பான் அவன். ஆனால் அனைத்துமே சந்தோஷத் தருணங்கள் மட்டுமே.

கடந்த ஒரு வாரமாக நினைக்கக் கூடாது என்று நினைத்த அவன் பிரிவு மட்டுமே கண் முன்னே மீண்டும் மீண்டும் வந்து போனது. எவ்வளவு முயன்றும் அதை மட்டும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

யாரையும் பார்க்கப் பிடிக்கவுமில்லை. பேசப் பிடிக்கவுமில்லை. தனிமையை நாடினாள்...

வீட்டுக்குச் சென்றால் தனிமைக் கிட்டாது. அன்னை எதையாவது தொணத்தொணத்துக் கொண்டிருப்பார். அவரின் எதிர்பார்ப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது.

ஏனெனில் முன்பெல்லாம் அதுவே மதுமிதாவின் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இப்பொழுது யாரும் தன்னை வேடிக்கைப் பார்க்காத தனிமையை நாடியது அவளுள்ளம்...

கிட்டிவிடும் எனத் தோன்றும் ஆழ்கடலின் அமைதி... தொட்டுவிடலாம் என எண்ணும் நீல வண்ண வானத்தின் தொலைவு... நிறைந்துவிடும் உப்புக் காற்றின் ஏகாந்தம்... இவ்வனைத்தும் அவள் மனதிற்கினியவனுக்குத் தூது விடும்...

‘ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி நேர்ந்தது?’ அவளுக்கு விடை தெரியாது. இதற்கு விடையும் கிடையாது. இருந்தும் விடைக் கிடைத்தால் தேவலாம் என்ற எதிர்பார்ப்பு...

அதனால் கடந்த ஒரு வாரமாகத் தினமும் மாலை நேரத்தில் இங்கு வந்து ஆர்ப்பரிக்கும் அலைகளைப் பார்த்தவாறே, ஆர்ப்பரிக்கும் மனதை சமன் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.

அலைகளாவது வெளிப்படையாக ஆர்ப்பரிக்கின்றது. கரையிடம் ஏதோ ஒரு செய்தி சொல்லிட துடிக்கின்றது. ஆனால் அவள் நிலை? ஆர்ப்பரிக்கும் அவளின் மனதை, அதில் புதைத்திருந்திருக்கும் துயரை அவளால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

நண்பர்களுக்கு அதைப் பற்றித் தெரியும். ஆனால் அதிலிருந்து மீண்டுவிட்டதாக வெளியில் உருவகப்படுத்தி வைத்திருந்தாள். தன் பொருட்டு எவரும் வேதனை அடையக்கூடாது.

அமர்ந்திருக்கும் அந்த ஒரு மணி நேரமும் கைபேசி அழைத்தால் எடுக்க மாட்டாள். ஆனால் நேரில் தரிசனம் அளித்தால் என்ன செய்ய முடியும்? முகத்தைத் திருப்பிக் கொண்டா செல்ல முடியும்?

“எது எதற்கோ கொந்தளிக்கிறோம்... அழகான பெண்கள் கண்களில் இருந்து சூடான கண்ணீர் வந்தால் கொந்தளிக்க மாட்டாமோ?” என்ற குரலில் திரும்பாமலேயே யாரென்று அவளுக்குத் தெரிந்து போயிற்று.

திரும்பி, “ராம்...?” என்றாள் ஆச்சர்யத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு. அவள் சந்தேகம் உண்மையென்றால் அவன் வருவான் என்று தெரியும்.

“யா... ராம்... ஸ்ரீ... ராம்” என்றவன், “இதை ஜேம்ஸ் பாண்ட் ஆல்ரெடி என்னைப் பார்த்துக் காப்பி அடிச்சுட்டார்... சோ டயலாக்கை மாத்தறேன்... ராம்... த லேட்டஸ்ட் டைம் பாம்...” என்றான் புன்னகையை முகத்தில் தேக்கி.

அவளும் பதிலுக்குப் புன்னகைக்க, “‘டைகர் பாம்’ன்னு என்னைக் கலாய்க்கக் கூடாது...” எனத் தொடர்ந்து அவன் சொல்ல மதுமிதாவின் புன்னகை மேலும் விரிந்தது.

“எப்படி இருக்கீங்க? பார்த்து நாளாச்சு...” என இயல்பாகப் பேசுவதைப் போல் மதுமிதா கேட்க அவன் முறைத்தான். அவனைப் பார்த்து பத்து நாட்கள் இருக்கும். அவனைப் பேட்டியெடுக்கவெனச் சந்தித்தது. அதனால் சம்பிரதாயத்துக்காக அப்படிச் சொன்னாள்.

“பார்த்து ரொம்ப நாளாச்சா? அப்போ என் ‘ப்ரோக்ராம்’ எதுவும் நீ பார்க்கிறதில்லை... அந்தளவுக்கு மொக்கை ‘பீஸா’ போயிட்டேனா?” என்றான் ஸ்ரீராம் வருத்தத்துடன்.

அவனின் வருத்தம் வேதனையைத் தர, “ச்சே.. அப்படியெல்லாம் இல்லை... போன வாரம் கூட நான் ப.... பார்த்தேனே... இன்னைக்கும் பார்க்கப் போறேன்...” என்றாள்.

“அப்போ எனக்கு இன்னும் இளம் பெண்களிடம் மவுசு இருக்குன்னு சொல்லற? இப்போ என் அடுத்த ஹாபி என்ன தெரியுமா? கதை எழுதறது... அதுவும் சாப்பிடறப்போ எழுதறது...” என நிறுத்தினான்.

அவள் ஏதாவது சொல்வாள் என அவளையே பார்த்திருக்க, அவள் கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். காற்றின் இசைக்கேற்ப அவள் முடிக் கற்றை அவள் முகத்தில் அலைபாய்ந்தாடிக் கொண்டிருந்தது.

கால்கள் மடித்து அதில் முகத்தைத் தாங்கி அமர்ந்திருந்தாள். அவள் மேலிருந்த துப்பட்டா அவனை உரசிக் கொண்டிருந்தது. அவன் நிறுத்தியதைக் கூட உணராதவாறு அமர்ந்திருந்தாள்.

‘சிலையாகி மனசுக்கு வலையை வீசும் கலையை எங்கு கற்றாள்?’ என அவனுள் காதல் பெருக்கெடுத்து ஓட, அதை ஒரு நிலைக்குக் கொண்டு வர பெரிதுமே திணறினான். அவள் எதுவும் சொல்லப் போவதில்லை எனப் புரிந்தது.

“ஏன் கேட்க மாட்டியா? என மீண்டும் ஒரு நொடி நிறுத்தியவன், “நீ கேட்கலைனாலும் நான் சொல்வேன்... சாப்பிடறப்போ கதை எழுதினா அது டேஸ்டியா இருக்கும்” என்றான் ஸ்ரீராம்.

“ராம்...” எனத் திரும்பிய அவளது முகம் இப்போது இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தது.

“சொல்லு... எதற்கு என்னை ‘அவாய்ட்’ பண்ணற?” என அவன் நேரடியாக விஷயத்துக்கு வர, அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பின்னே தொடர்ந்து பாத்து நாட்களாக குறுஞ்செய்திகள் மட்டுமே அவளிடமிருந்து. ஸ்ரீராமின் அழைப்புக்கள் பதிலற்றுப் போயின...

தன் செய்கையால் அவனைக் காயப்படுத்திவிட்டோமோ எனப் பதறியவள், “நோ.. அவாய்ட் பண்ணலை... கொஞ்சம் வேலைல டென்ஷன்..” என அவசரமாகப் பதில் தந்தாள்.

“அதனால் தான் கண் கலங்கியிருந்ததா? அதைவிடக் குயில் குரல்... காக்கா குரலா மாறியிருக்கா?”

எதுவும் பேசாமல் அலைகளைப் பார்க்க, “நான் மட்டும் தான் உன்னை ஃபிரெண்டுன்னு கூவி, கூவி வித்துட்டு இருக்கேன்... அதைக் கேட்டு இரண்டு பேர் உன்னை வாங்கறதுக்கு வந்துட்டாங்க... அவ்வளவு கிராக்கி... ஆனா நீ?” என விளையாட்டாக உதட்டைப் பிதுக்கினான்.

உண்மை தான்... ஸ்ரீராம் அவளுக்கு இதுவரையில் நல்ல நண்பனாக இருந்திருக்கிறான். அவனால் தான் அவள் இந்தளவுக்குத் தேறியதே. அவளும் தயங்காமல் அவனிடம் கலாட்டாவாகப் பேசிக் கொண்டிருந்தாள்

அவளின் மனக்கவலைகளையும் கொட்டுவாள். ஆனால் அவனை ஒதுக்கி வைக்க நினைத்திருந்ததால் அல்லவா இந்த ஆழ்கடலைத் தேடி அவள் வந்ததே...

பதில் வராது என அவனுக்குப் புரிய, “மது, இன்னைக்கு நீ சுண்டல் சாப்பிட்ட...?” எனக் கேட்க,

“இல்லையே... ஏன்?” என்றாள் குழப்பமாக.

“இல்ல.. சுண்.. டல் சாப்பிட்டுத் தான் உன் வாய்ஸ் ‘டல்லா’ இருக்கோ என டவுட்” என அவன் கண்களால் சிரிக்க, மதுமிதா எதுவும் சொல்லவில்லை.

“இப்படி மென்டல் மாதிரி உளறாமல் இரேன்டா” என அவன் மனதுக்குள் சொல்வதைப் போல் சத்தமாகச் சொல்ல, அதற்கும் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.

முன்பைப் போல் கலகலவென்று சிரிக்கவில்லை என்றாலும் சிறு புன்னகையையாவது சிந்துவாள். இன்று அதுவும் இல்லை.. என்னவோ நடந்திருக்கிறது.

“மது, என்ன பிரச்சனை? சொன்னாத் தானே வேதனை குறையும்...” என நேரடியாக அவன் கேட்க, ‘உன் நினைப்பு தான் என் பிரச்சனை’ என அவன் முகத்துக்கு நேராகச் சொல்ல விரும்பவில்லை. அத்தோடு அது மட்டும் காரணமல்லவே...

“சந்தோஷ்..” முத்து உதிர்ந்தது...

‘நடந்ததை மறக்கவே மாட்டாளா?’ என்று தோன்றியது ஸ்ரீராமுக்கு.

“போன வாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன்... அவர் வீடுன்னு தெரியாமல்” என நடந்ததை அவனிடம் சுருக்கமாகச் சொன்னாள். இதைத் தான் விதி என்பார்களோ?

“நான் தான் காரணம்... எல்லோரும் எனக்கு எவ்வளவு சமாதானம் சொன்னாலும் நடந்ததுக்குக் காரணம் நான் மட்டும் தான் இல்லையா? அவர் வீட்டிலேயும் அப்படியே நினைக்கிறாங்க....” வார்த்தைகளில் குற்ற உணர்ச்சி தலை தூக்கியிருந்தது.

அவளைப் பார்க்க, கண்களில் குளம் கட்டியிருந்தது. ஆனால் முன்பு போல் உரத்தெல்லாம் அழவில்லை. அதுவே சொல்லியது அவள் அதிலிருத்து சிறிது, சிறிதாக மீண்டு கொண்டிருக்கிறாள் என்பதை.

ஆழ்ந்த அமைதி இருவரிடத்திலும்...

‘இப்பொழுது தான் அவளை ஓரளவுக்குத் தேற்றிக் கொண்டு வந்தோம்... மீண்டும் முதலிலிருந்தா? அதனால் தான் தன்னிடம் கூட கோபமாக இருக்கிறாளா?’ என ஸ்ரீராமால் நினைக்காமலும் இருக்க முடியவில்லை.

அவர்களுக்கிடையில் நாழிகைகள் விடைப்பெற்றுக் கொண்டிருக்க, அவளின் மௌனத்தைக் கலைக்காமல் இருந்தான்.

சற்றுநேரம் கழித்து, “மது, என்னைப் பத்தி ஆர்டிகல் எழுதி அனுப்பறேன்னு சொன்ன... எங்கே?” எனப் பேச்சை மாற்றினான் ஸ்ரீராம்.

“அப்போ நான் தான் காரணம் என நீங்களும் நம்பறீங்க... அதான் ஒண்ணுமே சொல்லலை...” என்றாள் அவனைப் பார்த்துச் சிறு பிள்ளையென.

“என் சமாதானம் எதையும் நீ ஏத்துக்கப் போறதில்லை... அப்புறம் எதுக்குச் சொல்லணும்? பத்தாததுக்கு என்மேலே கோபமாவும் இருக்க.... புதுசா மரியாதை எல்லாம் பலமா இருக்கு” என ஸ்ரீராம் அவளை ஊடுருவ, பார்வையை அகற்றிக் கொண்டாள்.

‘ஆமா, நீ.. உன் நினைப்பு சரியில்லை... அதனால்...’ என்றா அவனிடம் சொல்ல முடியும்?

‘அப்படியில்லை’ என்று அவன் சொல்லிவிட்டால் அவள் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பாள்.

இருந்தும் இதை வளர விட அவளுக்கு விருப்பமில்லை. அதனால், “நீ என்னை ஃபாலோ பண்ணற மாதிரி இருக்கு ராம்...” என்றாள் வேறுவிதமாக.

அவள் சொல்வதைக் கேட்டதும் ‘பக்’கென்று சிரித்த ஸ்ரீராம், “உன்னைத் தொடர்ந்து துரத்திட்டு வர்ற வயசைக் கடந்திட்டேன்... கொஞ்சமே கொஞ்சம் பொறுப்புள்ள ஆளும்மா... எனக்கும் ஒரு தங்கை இருக்கா...” என்றான்.

அவன் சொல்லிய விதத்தில் அவளுள் இதம் பரவ, “அதற்காக உன்னை என் தங்கையா எப்பவும் நினைக்க முடியாது... மாட்டேன்... அதைப் பத்திச் சமயம் வரும் போது பேசலாம்...

ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ... உன்னைப் பார்க்கணும் என நினைச்சா நேர்ல வருவேன்... இப்படித் துரத்திட்டு இல்லை...” என்றவனின் குரலிலும், கண்களிலும் உண்மையைத் தவிர வேறெதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவன் சொன்னது முற்றிலும் உண்மை என அவளுக்குப் புரிந்தது. அவனிடம் என்றுமே நேர்மை இருக்குமே. அதை எப்படி மறந்தாள்?

“சொல்லு ஆர்டிகல் எழுதி அனுப்பறேன் எனக் கிளம்பி வந்த... அப்புறம் ஆளையே காணோம்... என்ன நடந்தது?” என்றான் தொடர்ந்து.

ஸ்ரீராமை ‘ஹர்ட்’ செய்துவிட்டோமோ என்ற எண்ணத்தில் இப்போது அவனது கேள்விக்கு மறைக்காமல் பதிலளித்தாள். ஆனால் முழுவதுமாகச் சொல்லாமல், “நான் எழுதின ஆர்டிகல் சரியில்லைன்னு தூக்கி வீசிட்டார் கிஷோர்...” என்றாள்.

குரலில் இருந்த கரகரப்பைக் கண்டு உள்ளுக்குள் பரிதவித்துப் போனான் ஸ்ரீராம். அவளை ஆறுதல்படுத்தியே ஆகவேண்டும் என்ற ஆவல் எழ,

“புதுசு தானே.. போகப் போகச் சரியாயிடும்... இல்லை, பேசாமல் என்கிட்டே வேலைக்கு வா...” என அவன் சொன்னது தான் தாமதம், பொங்கிவிட்டாள்.

“அப்போ நீயும் நான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு நினைச்சுட்ட... சமையல் நிகழ்ச்சி மட்டும் தான் எனக்கு வரும்னு சொல்லாமல் சொல்லற”

அவள் மேல் தப்பில்லை என்று அவளுக்குத் தெரியும். ஆனால் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஸ்ரீராம் அதை நம்பவேண்டாமா?

இது தான் அவன் எதிர்பார்த்த மதுமிதா. “சொல்லறதை முழுசாக் கேளேன்... நம்ம டிவில ‘இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம்’ பற்றிய ‘ப்ரோக்ராம்’ ஒண்ணு போகுது இல்லை.. அந்த ப்ரோக்ராம்ல நிறைய விஷயங்களைப் பகிர்ந்துக்க முடியலை...

அதனால் புதுசா பத்திரிக்கை ஒன்று ஆரம்பிக்கலாம் என ரொம்ப நாளா யோசனையா இருக்கு... வெறும் நியூஸ் மட்டும் இல்லை... எல்லாம் சேர்ந்து கலவையா ஒரு பத்திரிக்கை...

எனக்குப் பேச்சு வர்ற அளவுக்கு எழுத வரமாட்டேங்குது... அதனால் நம்பகத்தகமான ஆள் வேணும்... அப்பாகிட்டே பேசிட்டேன்... நல்ல ஆளாத் தேடிகிட்டு இருக்கேன்.. உன் கவிதை படிச்சேன்... வித்தியாசமா இருந்தது...

புதுசா யோசிக்கிற மூளை வேணும்... உன்கிட்டே மூளை இருக்கோன்னு தெரியாமல் கேட்டுட்டேன்... சாரி...” என்றான் ஸ்ரீராம் சிரிக்காமல்.

அதைக் கேட்டதும், “சாரி... சாரி... நான்..” என என்ன சொல்வது எனத் தெரியாமல் அவள் தடுமாற, “அப்போ நிஜமாவே மூளை இல்லையா?” என்றான் ஸ்ரீராம்.

“ராம்...” எனச் சிணுங்கிச் சிரித்தவள், “உங்க ஆஃபருக்குத் தேங்க்ஸ்... ஆனா எனக்கு என் திறமையால் வர்ற சான்ஸ் போதும்... நீங்க பரிதாபத்தில் வேலை கொடுக்கிறீங்க...” என்றாள்.

“ஹலோ... அப்படியெல்லாம் வேலைக்கு எடுக்க முடியாது... உனக்கு இண்டர்வியூ வச்சுத் தான் வேலைக்கு எடுப்பேன்” என ஸ்ரீராம் சொல்லவும், “பார்க்கலாம்... இப்போதைக்கு அங்கேயே வேலைக்குப் போறேன்... பிடிக்கலைன்னா வரேன்” என்றாள்.

“மது, உனக்குக் கிருஷ்ணர், பலராமன் கதை ஒண்ணு தெரியுமா?” என அவளைப் பார்த்தவன், தெரியாது என்பதைப் போல் அவள் புருவத்தைச் சுழிக்கவும், கதை சொல்ல ஆரம்பித்தான்.

கிருஷ்ணரும், பலராமனும் காட்டின் வழியே எங்கோ சென்று கொண்டிருந்தார்கள். காட்டில் நடந்து கொண்டிருக்கையிலேயே இருட்ட ஆரம்பித்துவிட்டது.

அங்கே தங்குவதற்கு எந்த இடமுமில்லாததால், “நான் தூங்கப் போறப்போ நீ காவல் காத்திரு... உனக்குத் தூக்கம் வந்தா என்னை எழுப்பிவிடு... நான் காவல் காக்கிறேன்” எனப் பலராமனிடம் கிருஷ்ணர் சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டார்.

அதன்படி பலராமன் காவல் காத்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த ஓர் அரக்கன் பலராமனைப் பார்த்துக் கூச்சலிட்டான். அதைப் பார்த்த பலராமன் பயந்து ஒடுங்க, அவர் உருவமும் சிறிதாக மாறியது. அதே சமயம் அந்த அரக்கனின் உருவம் பெரிதானது.

மறுமுறையும் இதே கதை தான். மூன்றாவது முறை, “கிருஷ்ணா....” எனக் கதறியவாறே மயங்கிச் சரிந்தார் பலராமன்.

துயில் கலைந்த கிருஷ்ணர், பலராமன் தூங்கிக் கொண்டிருக்கிறார் என எண்ணி காவல் காக்க ஆரம்பித்தார்.

அதே அரக்கன் இப்போது கிருஷ்ணரைப் பார்த்துக் கூச்சலிட, அவனைப் பார்த்துப் பயப்படாத கிருஷ்ணர், “உனக்கு என்ன வேண்டும்?” என்றார்.

அந்த அரக்கன் உருவத்தில் சிறிதாக, கிருஷ்ணர் நிமிர்ந்து நின்றார். அதே போல் மூன்று முறை நடக்க, அரக்கன் மிகவும் சிறிதாகிவிட அவனை எடுத்து தன் வேட்டியில் முடிந்து கொண்டார் கிருஷ்ணர்.

மறுநாள் விடிந்ததும் பலராமன் நடந்ததைக் கிருஷ்ணரிடம் சொல்ல, “இந்த அரக்கனா பார்...” என வேட்டியில் இருந்த அரக்கனை எடுத்துக் காட்டினார்.

“இவன் எப்படிச் சிறிதானான்? நேற்று நான் பார்க்கையில் பெரிதாக இருந்தானே?” எனக் கேட்க, “நீ சந்திக்க வேண்டியவற்றைத் தவிர்க்க நினைத்தால் அவ்விஷயம் பெரிதாகி உன்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

ஆனால் நீ சந்திக்க வேண்டியவற்றைத் தைரியமாகச் சந்தித்தால் அவ்விஷயத்தை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவாய்” என்றார் கிருஷ்ணர்” எனச் சொல்லி அலைகளைப் பார்த்தான் ஸ்ரீராம்.

சற்றுநேரம் மெளனமாக இருந்த மதுமிதா, “தேங்க்ஸ் ராம்... பெருசா எந்தப் பிராப்ளமும் இல்லை... வேலையிடத்தில் பிடிக்காத சில விஷயங்கள் நடந்தது” எனக் கிஷோர் அவள் கட்டுரையை நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டு அதையே பிரசுரிக்கக் கொடுத்தான் என அவன் நடந்து கொண்டதைப் பற்றிச் சொன்னாள்.

‘மீண்டும் ஒரு தடவை தன்னிடம் வாலாட்டட்டும்.. பிறகு  சொல்லிக் கொள்ளலாம் ‘என விட்டு விட்டாள். சொல்லியிருந்தால், அன்றே அவனை உண்டு இல்லை என்று செய்திருப்பான் ஸ்ரீராம்.

“போட்டி, பொறமை எல்லா இடத்திலும் இருக்கும் மது... போக, போகக் கத்துக்குவ... ‘மே பீ அவனை எதிர்த்து இன்னொரு பாஸ் விக்னேஷ் உனக்கு ‘இம்பார்டென்ஸ்’ கொடுக்கிறது பிடிக்கலையா இருக்கும்...” என்றான்.

 “இருக்கலாம்...” என அவளும் ஒத்துக்கொள்ள, “கொஞ்ச நாள்ல சரியாயிடும்... உன் திறமையை நீ காட்டு... உன் வளர்ச்சி தன்னால் உயரும்” என ஸ்ரீராம் சொல்ல, “தேங்க்ஸ் ராம்” எனச் சம்மதமாகத் தலையை ஆட்டினாள். ஆனால் கிஷோர் விடவேண்டுமே.

நேர்முகத் தேர்வின் போது, “எனக்கு இந்த வேலை மிகவும் முக்கியம்” என்றதும் இயல்பில் நல்ல குணம் கொண்ட விக்னேஷ் அதைப் புரிந்து கொண்டு அவளுக்கு வேலையைத் தந்தான். ஆனால் கிஷோரோ அவளுக்குப் பணத்தேவை என்று தவறாக ஊகித்துக் கொண்டான்.

அதோடு மதுமிதாவின் பேச்சுத் திறமையில் ஆச்சரியமடைந்தான் விக்னேஷ். அதனால் தான் முடிந்த வரையில் செய்திக்கென விஷயம் சேகரிப்பதில் அவளை விட்டிருந்தான். இதுவரையில் அவளுக்கு இட்ட வேலைகளை நன்றாகவே செய்து முடித்திருந்தாள். கடைசியில் எழுதிய அந்தக் கட்டுரையைத் தவிர என்று நினைத்துக் கொண்டான் விக்னேஷ்.

அதற்குக் காரணமாகக் கிஷோர் இருக்கக் கூடும் என்று அவன் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. பல வருட நட்பு, மற்றும் உறவினன் என்பதால் அவன் மேல் சிறிதும் சந்தேகம் வரவில்லை.

நன்றி தெரிவித்த மதுமிதாவிடம், “பெண்களுக்குச் சிரிப்பு அழகு எனச் சொன்ன இந்தச் சிரித்த முகம் ரொம்ப அழகு...” என்றான் ஸ்ரீராம் புன்னகையுடன்.

மதுமிதா சொன்ன அதே வாக்கியம் தான். “பெண்களுக்கு எது அழகு?” என ஒரு நிகழ்சிக்காக அவன் கேட்டதுக்கு மதுமிதா சொன்ன பதில் அது.

அந்த நினைவில் மதுமிதா லயித்திருக்க, “மறக்க வேண்டாம்... என்ன நடந்தாலும் உனக்கு எப்பவும் ஒரு நல்ல ஃபிரெண்டா நான் இருப்பேன்... அதே மாதிரி எப்போ தேவைன்னாலும் உனக்குத் தர்றதா சொன்ன வேலையும்... எழுத நினைச்சா நம்ம பத்திரிக்கையில் ‘ப்ரீ லான்ஸா’ எழுது” என்றான் ஸ்ரீராம்.

“தனித்துச் செயல்பட நினைக்கிறேன் ராம்.. தேவைன்னா கட்டாயம் உன்கிட்டே வர்றேன்...’” என்றாள்.

“சரி... இப்போக் கிளம்பி உன் பேக்கரிக்கு போ.... ஒரு வாரமா வரலைன்னு ரஞ்சி சொன்னாங்க.. இந்தச் சின்ன விஷயத்துக்கு ஓடி ஒளியலாமா நீ?” என்றான்.

கடந்த பத்து நாட்களாக ஸ்ரீராமிடம் அவள் பேசவில்லை என்றதும் வெதுப்பகத்துக்குச் சென்று ஸ்ரீராம் காத்திருந்தான். அங்கும் அவள் வரவில்லை என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டான். ஏதோ சரியில்லை என்பதையும் புரிந்து கொண்டான்.

இன்று ஸ்ரீராமின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்று கடற்கரையில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்வையிடவே அங்கே வந்திருந்தான். அதை முடித்துக் கொண்டு நேராக மதுமிதாவின் வெதுப்பகத்துக்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தான்.

ஆனால் வேலையை முடிக்கும் தருவாயில் அங்கே அமர்ந்திருந்த மதுமிதாவை கண்டான். அலைகளுக்குப் போட்டியாகக் கரைந்து கொண்டிருந்தாள். அவள் மேல் ஒரு கண்ணும், வேலையில் ஒரு கண்ணும் வைத்துக் கொண்டிருந்தவன், வேலை செய்தவர்கள் அனைவரும் கிளம்பிப் போனதும் மதுமிதாவிடம் வந்தான்.

“சரி ராம்... நாளைக்குப் போறேன்” என மதுமிதா சொல்லும் வரையில் அவளை அங்கிருந்து நகர விடவில்லை அவன். அத்தோடு அவனை ஒருமையில் அழைக்கும் வரை அவளை விடவுமில்லை.