திருமதி லாவண்யா எழுதிய இதழில் கதையெழுது...

அத்தியாயம் – 2

புரட்டிப் போடும் மழையைப் பொருட்படுத்தாமல், உள்ளே பேரலையாகச் சுருட்டி முடக்கும் உணர்வுகளை என்ன செய்வதென்று தெரியாமல், இயந்திரத்தனமாக வண்டியை ஓட்டிக் கொண்டு வீட்டை அடைந்தாள் மதுமிதா.

தொப்பலாக நனைந்திருந்த மகளைப் பார்த்ததும், கல்யாணிக்குக் கோபம் வருவதற்குப் பதில் புன்னகையே வந்தது.

பின்னே எப்பவும் துள்ளலுடன் திரியும் பெண் சமீப காலமாக உயிர்ப்பேயில்லாமல் இருந்தால் அவர் என்னவென்று நினைப்பார்? இன்று அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக மழையில் நனைந்து கொண்டு வந்திருக்காளே என மகிழ்ந்தார்.

உள்ளத்து மலர்ச்சியை வெளியில் காட்டாமல், “நீ என்ன சின்னப் பெண்ணா இப்படி மழையில் நனைஞ்சுட்டு வந்திருக்க?” எனச் செல்லத்தைக் குழைத்துத் திட்டியவாறே மகளின் தலையைத் துவட்ட ஆரம்பித்தார்.

“என்னடா இது? காய்ச்சல் வந்துடாதா? வண்டியை ஆபிஸ்ல விட்டுட்டு ‘கால் டாக்ஸி’யில வந்திருக்கலாமே...” எனத் தந்தை ஜெயக்குமாரும் அக்கறையாகக் கேட்க,

“வீடு வரைக்கும் வந்துட்டேன்ப்பா... அதுக்குள்ளே மாட்டிக்கிட்டேன்” என்றாள் மதுமிதா.

“சரி... சரி... போய்ச் சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு வா... உனக்குப் பிடிச்ச ப்ரோக்ராம் வரப் போகுது...” என ஜெயக்குமார் சொல்ல, அது தான் சாக்கென்று, “அப்படியே குளிச்சுட்டு வர்றேன்” எனத் தன் அறைக்குச் சென்றாள்.

வாய்விட்டு ஓவென்று கதற வேண்டும் போலிருந்தது மதுமிதாவுக்கு. ஆனால் அழுதால் அவளவனுக்குப் பிடிக்கவே பிடிக்காதே. முயன்று தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள்,

“இல்லை... நான் காரணம் இல்லை... நடந்த எதற்கும் நான் காரணமில்லை...” என உதடுகள் விடாமல் முணுமுணுக்க ஷவரின் கீழே நின்றிருந்தாள்.

அவள் மேல் பட்டுச் சுழித்து ஓடிய தண்ணீரிலேயே தன் குற்ற உணர்ச்சியைக் கழுவிட நினைத்தாளோ? வெகுநேரம் அப்படியே இருந்தாள்.

முன்னறைக்குச் சென்றால் பெற்றோர்கள் எதையாவது தொணதொணத்துக் கொண்டிருப்பார்கள். அவளால் இப்போதைய மனநிலையில் அதைச் சகித்துக் கொள்ளவும் முடியாது. அதற்காகக் கோபமாகப் பேசி அவர்களை வருத்தவும் முடியாது.

அதனால் அவள் அறையில் இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்துச் சத்தத்தைக் கூட்டினாள். தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் மகள் என நினைத்துக் கொள்ளட்டும். அடுத்த நொடி தொய்ந்து போய்ப் படுக்கையில் விழுந்து கண்களை மூடினாள்.

எத்தனை நேரம் அப்படியே கிடந்தாளோ, “வணக்கம்... வணக்கம்... வணக்கம்....” எனப் பேச்சில் கூடப் புன்னகையைத் தவழ விட்டவாறே ஒலித்த ஸ்ரீராமின் குரலில் விழிகளை மலர்த்தினாள்.

அவளுக்குப் பிடித்த, அல்ல, முன்பு பிடித்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. அதை நடத்திக் கொண்டிருந்தவன் ஸ்ரீராம். அவனைப் பார்த்த அடுத்த நொடி நம்மையும் அறியாமல் நம் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொள்ளும் என்றால் மிகையல்ல.

பார்த்தாலே அப்படி... பேசினால் கேட்கவே வேண்டாம். எந்நேரமும் மலர்ந்த முகத்துடனும், இனிமையான பேச்சுடனும் வளைய வருபவனை யாருக்குத் தான் பிடிக்காமல் இருக்கும்?

ஸ்ரீராம், பிரபல தனியார் தொலைக்காட்சி, ‘வைகறை’யின் உரிமையாளன். ஸ்ரீராம் நடத்தும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் அலைமோதும். அதுவும் அவனுக்கு ஏராளமான இளம் பெண்கள் பரம விசிறிகளாகவும், இராட்சதக் காத்தாடிகளாகவும் இருக்கிறார்கள் என்பதில் அவனுக்கு அளவில்லாப் பெருமை.

நகைச்சுவையாகக் கேள்விகளைக் கேட்டு, அதற்கு ஒத்தவாறே பேசி அனைவரையும் சிரிக்க வைப்பான். அழைக்கும் நேயர்களுக்குப் பிடித்த பாடலையோ, அல்லது, நகைச்சுவைத் துணுக்கையோ போட்டு மகிழ்விப்பான்.

அரைமணி நேரம் ஓடும் அந்நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பிக்கும் பொழுது எந்த மனநிலையில் இருந்தாலும் பார்த்து முடிக்கையில், மனம் லேசாகிவிட்டிருக்கும் என்பது எழுதப்படாத உண்மை.

அந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், அவனை அழைக்கும் நேயர்கள் மேலோட்டமாகப் பேசாமல் தங்கள் அந்தரங்கப் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி ஒரு நெருக்கத்தைத் தன் பேச்சால் தோற்றுவித்திருந்தான் ஸ்ரீராம்.

நெருக்கமானவர்களிடம் கூடப் பகிர்ந்து கொள்ள யோசிக்கும் விஷயங்களை இவனிடம் தயங்காமல் சொல்வார்கள். தீர்வு கிடைக்கும் என அத்தனை நம்பிக்கை.

அதற்காக ‘டீ.ஆர்.பி.’ ரேட்டிங்கை எகிற வைக்க வேண்டும் என்றெல்லாம் சினிமாத்தனமாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லமாட்டான். வெகு இயல்பாக அவர்கள் பகிரும் விஷயங்களை அலசி ஆராய்ந்து, அக்கறையுடன் தீர்வொன்றைக் காண முயல்வான்.

அதற்காகவெனச் சம்மந்தப்பட்ட நிபுணர்களை அழைப்பான். மருத்துவப் பிரச்சனைக்கு என்றால் மருத்துவரை, உளவியல் பிரச்சனைக்கு மனோ தத்துவ நிபுணரை, சட்ட ரீதியான பிரச்சனைகளுக்கு வழக்கறிஞர் என அழைத்து நேயர்களின் கேள்விக்குப் பதில் கிடைக்கச் செய்வான். இதன் மூலமாகவே பலரும் அவன் நட்பு வட்டத்தில் இணைந்திருந்தனர்.

சுருக்கமாக அவர்கள் சொல்லும் அறிவுரைகள், கருத்துக்கள் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும். பலரும் அதன்பின்னர் ஸ்ரீராமுக்கு அழைத்து, தங்கள் வாழ்வில் உள்ள சிக்கலைத் தீர்த்து வைக்க வழி செய்ததற்கு அவனுக்கு நன்றி தெரிவிப்பார்கள்.

இந்தத் தொலைக்காட்சி நிறுவனம் அவன் தந்தையின் தொழிலாக இருந்தது. அவருக்கு உடல் சுகவீனமற்றுப் போன பின்னர் அந்நிறுவனம் அவன் வாழ்க்கையின் இலட்சியமாக மாறிவிட்டது. அதற்காக அவன் சிறிதும் வருந்தவில்லை.

கிடைத்ததை வைத்து முன்னேறும் ரகம் அவன். தன்னால் பிறர் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன். சிரிக்க, சிரிக்கப் பேசி மற்றவர்களைக் கவர்ந்து விடுவதில் சகலகலா வல்லவன்.

அக்கலையை எங்கு கற்றான் என அவனிடம் கேட்டால், ‘மேக் அப்படி’ என்பான்.

ஸ்ரீராம் படித்துக் கொண்டிருக்கும் பொழுதிலிருந்தே பகுதி நேர வேலையாக அவன் தந்தை நடத்திய தொலைக்காட்சி ‘சேனலி’ல் ‘காம்பியராக’ இருந்தான். அதையும் அவன் நண்பர்களின் உந்துதலால் செய்ய ஆரம்பித்தான்.

அந்தப் பயணம் இன்று வரையிலுமே தொடர்கிறது. என்ன, இப்போது பொறுப்புகள் தான் அவனுக்கு அதிகமாகிவிட்டன. அவனுக்கு வேலை செய்பவர்களுக்குத் தெரியும் அவன் பொறுப்புகளைப் பற்றி. ஆனால் பார்வையாளர்களுக்கு அவன் அங்கு வேலை செய்பவன் மட்டுமே.

மிகவும் நெருக்கமானவர்களைத் தவிர ஒருவருக்கும் ஸ்ரீராம் அந்தத் தொலைக்காட்சியின் முதலாளி என்று தெரியாது. ஆனால் கூடிய விரைவில் தெரிய வரும். அதுவும் மதுமிதாவின் பேட்டியினால். ஆம்! முத்திரைப் பதித்த வித்தகர்களுள் அவனும் அடங்குவான்.

        

அவனின், இந்த பந்தா இல்லாத குணத்தால் தானோ என்னவோ ரசிகர்கள் அவனைத் தங்களுள் ஒருவனாகவே பாவித்தனர்.

“வணக்கம் நேயர்களே... எனக்காக ஒரு வாரம் சாப்பாடு, தூக்கமில்லாமல்... உங்க இதயத்தில் பலத்த சூறாவளி உருவாகி, மேகமூட்டத்துடன் கூடிய கண்களில் விடாது அடைமழை பொழிவதாக என் வானிலை அறிக்கை சொன்னது...

உடனே உங்கள் முன்னால் வந்துவிட்டேன்...” என்ற ஸ்ரீராமின் பேச்சால் மதுமிதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

‘என்ன ஒரு கான்பிடன்ஸ்...? இவன் இல்லையென்றால் தன்னால் இந்தளவுக்குத் தேறி வந்திருக்க முடியுமா? சிரித்துப் பேசி, கலாட்டா செய்தே மனதைத் தேற்றிவிட்டான்’ எனப் பழைய நினைவுகளுக்குள் மூழ்க நினைக்க,

“இதுவரைக்கும் யூஸ் பண்ணாம வச்சிருக்கிற மூளையைத் தட்டிச் சிந்திக்கறதுக்கு அரிய வாய்ப்பு... கழுதைக்குப் பிடிச்ச ‘ப்ரெட்’ எது என யோசிங்க... முதல் காலர் வெயிட் பண்ணறாங்க... அவங்களோட பேசலாம் வாங்க... ஹலோ சொல்லுங்க...” என்ற குரல் அவளை மீட்டது.

“வணக்கம் அண்ணா... என் பேர் விஜய்... நான் உங்க பெரிய ஃபேன்... அய்யோ எனக்குக் கையும் ஓடலை... காலும் ஓடலை” என அழைத்த இளைஞன் பரவசத்துடன் பரபரக்க,

“விஜய்... கால் ஓடிப் பார்த்திருக்கேன்... கை எப்படி ஓடும்? சொல்லுங்க...” என ஸ்ரீராம் அவனைக் கலாய்க்க, “போங்க அண்ணா... ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்” என வெட்கப்பட்ட விஜய்,

“அண்ணா... என் வாழ்க்கை ஒரு பெண்ணால புரண்டு போச்சு...” எனச் சோகமாகிவிட்டான்.

‘மீண்டும் ஒரு காதல் தோல்வியா?’ என நினைத்த ஸ்ரீராம், “சொல்லுங்க... என்னாச்சு?” என அக்கறையாக வினவினான்.

“சார்... என் சொந்த ஊர் மதுரை.... ஒரு பெண்ணால் திருச்சிக்கு ஓடி வர வேண்டியதாப் போச்சு... வீட்ல அம்மா-அப்பா ரொம்பக் கவலைப்படறாங்க...” என நிறுத்தினான்.

‘காதலியுடன் ஓடி வந்துவிட்டானோ?’ என ஸ்ரீராமின் கற்பனைக் குதிரை தறிகெட்டு ஓட, “கவலைப்படாதீங்க விஜய்... வீட்டில் உங்களைச் சீக்கிரம் புரிஞ்சு ஏத்துக்குவாங்க....” என்றான் வாய்மொழியாக.

“இல்லை சார்... அவங்களால் ஏத்துக்க முடியலை...” என மீண்டும் கலக்கத்துடன் அவன் சொல்ல, “சொல்லுங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும்?” என்றான் ஸ்ரீராம்.

“இல்ல சார்... என் மனசில் இருக்கிறதை உங்க நிகழ்ச்சியில் பகிர்ந்துகிட்டாலே போதும்.. அதைக் கேட்டு அவங்க மாதிரி இருக்கிற பெண்கள் ஃபீல் பண்ணட்டும்...” என்றதும், ஸ்ரீராம் குழம்பிவிட்டான். என்ன சொல்ல வருகிறான் இவன்?

விஷயம் இது தான்.

மதுரையில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில் விஜய் வேலையில் இருந்தான். பெற்றோரை விட்டுப் பிரிய வேண்டாம் என ஆனந்தமாக இருந்தவனின் எண்ணத்தில் மலை அளவுக்கு மண். அதையும் ஒரு பெண் கொட்டிவிட்டாள்.

மதுரையில் உள்ள குறிப்பிட்ட அந்த வங்கிக் கிளையில் அவளுக்கு வேலை வேண்டும் என்ற காரணத்தால் சிபாரிசு பிடித்து அங்கே வேலையில் சேர்ந்து கொண்டாள். அதனால் அதே நிலைப்பாடிலிருக்கும் விஜயை திருச்சிக்கு மாற்றிவிட்டார்கள்.

அதன் காரணமாகச் சமைக்கத் தெரியாத விஜய் வயிற்றுக்கு உணவில்லாமல் திண்டாட வேண்டியதாகிவிட்டது.

“இப்படி ஒரு வயசுப் பையன் வயித்துல அடிச்ச அந்தப் பெண் நிம்மதியா இருக்க முடியுமா? என் சாபம் சும்மா விடுமா? சொல்லுங்க ராம் அண்ணா... சொல்லுங்க” என ஸ்ரீராமிடம் முறையிட, அவனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் எங்கே அளவுக்கு அதிகமாகச் சிரித்து விஜயின் சோகத்தை மேலும் தோண்டி வீடு கட்டிவிடுவோமோ என மிகவும் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் ஸ்ரீராம்.

“ஆமாம்... கண்டிப்பா.. அன்னலட்சுமின்னு பெயர் வாங்கின பெண்கள் இப்படி வயிற்றைப் பார்த்து ஓங்கிக் குத்தும்போது கண்டிப்பா மன்னிக்கவே முடியாது... ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனும்பொழுது ஜகத்தினை அழித்திடுவோம்’ எனப் பாரதியே சொல்லியிருக்கார்...

ஆனா, அதற்காக நாங்க உலகத்தை அழிக்கவெல்லாம் மாட்டோம். இதைக் கேட்கும் பெண்கள் எல்லாம் இவரின் சோகம் பார்த்து உடனே திருந்திடுங்க ப்ளீஸ். எவ்வளவு ஃபீல் பண்ணறாரு பாருங்க...” என்ற ஸ்ரீராம்,

“விஜய்... இப்போ ஹாப்பியா நீங்க? உங்களுக்குப் பிடிச்ச பாட்டோ, காமெடி சீனோ சொல்லுங்க... போடறோம்...” எனக் கேட்டு அவனுக்குப் பிடித்த பாட்டை ஒளிபரப்பினான்.

ஸ்ரீராம் முயன்று தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான் என அவனைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மதுமிதவுக்குப் புரிந்தது. அவன் கண்கள் எல்லாம் சிரிக்கின்றனவே.

பாடல் ஒளிபரப்பப்படும் பொழுது ஸ்ரீராம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து, விழுந்து சிரித்திருப்பான் என்று அவளுக்குத் தெரியும். அவள் படிக்கும் காலத்தில் அவன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி நடத்தும் பொழுது அவனின் நடவடிக்கைகளைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறாளே.

‘பாவம் ராம். தன் உணர்வுகளை மறைத்து இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருக்கிறது. ஆனாலும் இப்படியெல்லாமா பெண்கள் ஆண்களைத் துன்பப்படுத்துவார்கள்? பாவம் தான் இந்த ஆண்கள்’ என எண்ணியவளுக்கு அவளையும் மீறிச் சிரிப்புப் பொங்கியது.

பாடல் முடிந்து, “என் கேள்விக்குப் பதில் தெரிஞ்சதா? கழுதைக்குப் பிடிச்ச ‘ப்ரெட்’ எதுன்னு கண்டுபிடிச்சீங்களா?... கழுதைக்கு எதைக் கொடுத்தாலும் பிடிக்குமே என என் அம்மா என்னைப் பத்திப் புகழ்ந்து பேசறது உங்க காதுக்குக் கேட்காது...

அந்தத் தைரியத்தில் இந்தப் பதிலைச் சொல்லறேன்... கழுதைக்கு ரொம்...பப் பிடிச்சது ‘சுவரொட்டி... சுவரொட்டி... சுவரொட்டி.’ சுவரைக் கட்டி, அதுமேல எட்டி உட்கார்ந்துட்டு இப்படியெல்லாம் யோசிப்பாங்களோ?” என்றவன்,

“அடுத்த நேயர் நமக்காகக் காத்திருக்காங்க... அதுக்கு முன்னாடி, ஒருத்தன் அவசர அவசரமா பெயின்ட் அடிச்சுட்டு இருந்தான்... ஏன்னு கேட்டா என்ன பதில் சொல்லியிருப்பான்? யோசிங்க... யோசிங்க... உங்க மூளையைத் தட்டி யோசிச்சுட்டே இருங்க...

இதோ, அடுத்தக் காலர் வந்துட்டாங்க... ஹலோ சொல்லுங்க...” என அடுத்த நேயரைக் கவனிக்கச் சென்றான்.

“ஹாய்... என் பேர் இனியா... இதை வெளியில் யார்கிட்டேயும் கேட்க முடியலை... என்னைப் பைத்தியம் எனச் சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு...” என்று  ஒரு  பெண் புலம்ப,

“சொல்லுங்க... உங்க பிரச்சனை என்னன்னு... பார்த்துத்  தீர்த்திடலாம்” என்றான் ஸ்ரீராம்.

“அது வந்து செஞ்ச வேலையையே அடிக்கடி செஞ்சிட்டு இருக்கேன்... உதாரணத்துக்கு எங்காவது வெளில போறப்போ வீட்டைப் பூட்டிட்டு, நாலு தடவை திரும்பத், திரும்ப வந்து ‘செக்’ பண்ணறேன்...

இது மாதிரி நிறைய... அன்றாட வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொண்ணுக்கும் இப்படிப் பண்ணறேன்... இதனால் என் இயல்பைத் தொலைத்து பைத்தியமாயிட்டேனோ என எனக்கே பயமாயிருக்கு... முன்னெல்லாம் இப்படி இல்லை... இப்போ சமீபமாத் தான்... ”

“இருங்க இனியா.. உங்க பிரச்சனைப் பற்றி உளவியல் நிபுணர்கிட்டே கேட்கலாம்..” என்ற ஸ்ரீராம், மனோத்துவ மருத்துவருக்கு அழைத்து விவரத்தைக் கூற அவரும் விளக்கமாகப் பதில் அளித்தார்.

“நீங்க குறிப்பிடற இந்த அறிகுறிகள் சிலருக்கு ஆரம்பத்தில் இருந்தே இருக்கும்... மருந்து, மாத்திரைகள் மற்றும் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் அதைக் கட்டுப்படுத்தலாம்...

சிலருக்கு திடீர்ன்னு வரும்... உதாரணமா யாராவது நெருக்கமனவங்களை இழந்தா. அப்படி இடையில் வந்திருந்தா உங்கள் எண்ணங்களில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தாலே சீக்கிரம் சரியாயிடும்...

இதுக்கு OCDன்னு சொல்வாங்க... அதாவது Obsessive-Compulsive Disorder (அப்சசிவ்-கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்) அது ஒருவித மனச் சுழற்சி நோய்... கட்டாயம் வேண்டும் என்ற பிடிவாதமும், பலவந்தமாக அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதிகம் இருக்கும்.

உங்க அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காத வரையில் இச்செயல்கள் இருந்தா பரவாயில்லை... ஆனால் உங்க அன்றாட வாழ்க்கையைப் பாதிக்குதுன்னு உங்களுக்கே தெரிஞ்சா உடனே நல்ல மருத்துவரைப் பாருங்க...

இது மனநோயெல்லாம் இல்லை... ஒருவித பயம்... தப்புப் பண்ணிடுவோமோ என்கிற பயம்... அதனால் நெகடிவ்வா யோசிக்கறீங்க... உங்களுக்கு மட்டும் இல்லை... பெரும்பாலானவர்களுக்கு இந்தப் பயம் இருக்கும்...

உதாரணத்துக்கு அடுப்பை அணைச்சுட்டோமா என அடிக்கடி ‘செக்’ பண்றது... நீங்க சொல்லற மாதிரி கதவு பூட்டி இருக்கான்னு திரும்பத் திரும்பப் பார்க்கறது... இப்படிப் பல விசயங்கள் நம் அன்றாட வாழக்கையைப் பாதிக்கும். இதை எளிதாகக் கடந்திடலாம்....

அதைப் பற்றியே யோசிச்சுக் கவலைப்படாம நல்ல மியூசிக் கேளுங்க... சந்தோஷமான விஷயங்களைப் பேசுங்க... அந்தப் பயம் குறைய வாய்ப்பிருக்கு...

ஆனால் சில விஷயங்களை அப்படி நம்மால் ஒதுக்கவோ, கடக்கவோ முடியாது. இந்த மாதிரி பயம் இருபத்திநாலு மணி நேரமும் இருந்தா மருத்துவர்கிட்டே காட்டறது நல்லது. ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடினால் சிலதை மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சரி செஞ்சிடலாம்...

உங்களுக்கு வேண்டிய மருத்துவரின் விவரங்களை நான் பேசி முடிச்சதும் சொல்வாங்க... நிலைமை கட்டுக்கடங்காமல் போற மாதிரி உணர்ந்தா மருத்துவரைக் கண்டிப்பாப் பாருங்க... பயம் வேண்டாம்... எல்லாமே தீர்க்கக் கூடியது தான்” என நீண்ட விளக்கத்தைத் தந்தார் அந்த உளவியல் நிபுணர்.

“ரொம்பத் தேங்க்ஸ் ராம்... சார்... எனக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்...” எனப் பாட்டைக் குறிப்பிட்டுச் சொல்லி, “அதைப் போடுவீங்களா?” என அத்தோடு அந்த நேயரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

‘சந்தோஷம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்... இல்லையென்றால் மனிதருக்கு ஏது பலம்...’ பாடல் பாட ஆரம்பித்தது. அந்தப் பாடல் மதுமிதாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.

சற்றுநேரம் அந்தப் பாடலின் இனிமையிலும், பொருளிலும் திளைத்திருக்க, “என்ன நேயர்களே... என் கேள்விக்கு விடைத் தெரிஞ்சதா? ஒருத்தர் ஏன் அவசரம் அவசரமா பெயின்ட் அடிச்சிட்டு இருந்தார்ன்னா, அந்தப் பெயின்ட் தீர்ந்துப் போறதுக்குள்ளே அடிக்கணும் இல்ல... அதனால் தான்” என ஸ்ரீராம் மீண்டும் திரையில் தோன்றினான்.

“இருங்க, இருங்க.. என் தண்ணி தீர்றதுக்குள்ளே நான் குடிச்சுட்டு வந்திடறேன்” என பாட்டிலில் இருக்கும் தண்ணியை வாயில் அவசர, அவசரமாகச் சரித்துக் கொண்ட ஸ்ரீராம்,

“சரி... சரி நீங்களும் உங்க குழம்புச் சட்டியைப் பார்த்து ஓடுங்க... இல்லை, அது தீர்ந்திடும்... நான் உங்க கிட்ட இருந்து விடைபெறும் முன்னால் கடைசிக் கேள்வி.... எல்லா மொழிகளையும் பேசக் கூடியது எது?”

“சீக்கிரம் கூப்பிடுங்க... உங்களுக்கான பரிசைத் தட்டிச் செல்லுங்க...” என அவன் முடித்தவுடன் ஓர் இளைஞன் அழைத்திருந்தான்.

“அண்ணா, எல்லோரையும் நீங்க கேள்வி கேட்கறீங்களே... நான் உங்களுக்கு டெஸ்ட் வைக்கிறேன்... பெண்களை ஏன் ‘தேவதை’ன்னு சொல்லறோம் தெரியுமா?” என அவன் கேட்க,

“ஏன்னா அவங்க தேவதைகள் மாதிரி மென்மையானவங்க... அழகானவங்க...” என்றான் ஸ்ரீராம்.

“தப்பு அண்ணா... தப்பு... பசங்க ஏன் பெண்களைத் தேவதைன்னு சொல்லறாங்க தெரியுமா? அவங்க நம்மளை கன்னா பின்னான்னு டார்ச்சர் பண்ணறதால்... அதாவது வதைக்கிறதால... ‘தே... (they) வதை (torture)... அதனால் ‘தேவதை’ஆயிட்டாங்க...” என்றான்.

“ஐயோ... ப்ளீஸ் பேன்ஸ்... முக்கியமா கேர்ள் பேன்ஸ்... நான் இவரோட கட்சியில்லை.. மீ குட் பாய்... நான் அப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டேன்...” என நேயர்களிடம் பொதுவாகப் பதறிய ஸ்ரீராம்,

“ஹலோ தம்பி... ஏன்? உங்களுக்கு நான் என்ன கெடுதல் செஞ்சேன்? இப்படி என்னை வில்லங்கத்துல மாட்டிவிடறீங்க? என் அம்மாவை தேவதைன்னு டெய்லியும் சொல்வேன்...  இப்போ நீங்க சொல்லறதைக் கேட்டா என் அம்மா என்னை வதை செய்யவா?

 நான் வரலை இந்த விளையாட்டுக்கு... என் அம்மா எப்போதும் எனக்குத் தேவதை” என அழைத்த அந்த இளைஞனிடம் சொன்னான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதுமிதாவுக்குச் சிரிப்புப் பீறிட்டது.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என ஸ்ரீராம் தொடர்ந்து கேட்க, “எல்லா மொழிகளையும் பேசக் கூடியது டீ.வீ....” என்றான் அந்த இளைஞன்.

“அட...இந்தப் பதில் கூட நல்லா இருக்கே... நீங்க எப்பவுமே இப்படி ஏடாகூடமாத் தான் யோசிப்பீங்களா தம்பி? பட் என் ‘ஆன்சர் கீ’ல இது இல்லையே... என்ன பண்ணலாம்?” என யோசிப்பதைப் போல் நடித்தவன், “சரி... உங்களுக்கு ஆறுதல் பரிசு கொடுத்திடலாம்...” என்றான்.

இறுதியில் வேறொரு பெண் அவனை அழைத்து, ‘எதிரொலி தான் எல்லா மொழிகளையும் பேசக் கூடியது” எனச் சொல்ல, “ச்சே.. என் அறிவு அப்படியே உங்ககிட்டே இருக்கு... குட்...” என்றான்.

“இது ஓவர்.... பிட் பேப்பர் வச்சுத் தானே நிகழ்ச்சி நடத்தறீங்க...” என அப்பெண் சொன்னதும்,

“ஷ்.. தொழில் இரகசியம்... வெளியில் சொல்லக் கூடாது... எக்சாமினர் வந்துடுவார்... நேரமாயிடுச்சு... உங்களைத் தனியா கவனிச்சுக்கிறேன்.. எல்லோருக்கும் நன்றி... நன்றி...

உங்களை அடுத்த வாரத்தில் மீண்டும் சந்திக்கும் வரையில் உங்களிடம் இருந்து விடை பெறுவது... உங்கள்... இல்லை... என் அம்மாவோட ஸ்ரீராம்” எனத் திரையில் இருந்து மறைந்தான்.

அந்நிகழ்ச்சியைப் பார்த்திருந்த மதுமிதாவின் உதட்டில் இப்போது பெரிதாகப் புன்னகை குடி கொண்டிருக்க, ‘யூ ஆர் அன்பிலீவபில் ராம்...’ என முணுமுணுத்தாள்.

அப்போது தான் காலையில் அவன் அனுப்பிய செய்திக்கு இன்னும் பதில் அனுப்பவில்லை என்பது ஞாபகத்துக்கு வர, கைபேசியை எடுத்து, “கடி என்னை நல்லாக் கடிச்சு வச்சு.. ஒரே இரத்தம்...” என பதில் அனுப்பினாள்.