திருமதி லாவண்யா எழுதிய இதழில் கதையெழுது...

அத்தியாயம் – 4

பத்து மாதங்களுக்கு முன்னால் என்றால் ஸ்ரீராமை மதுமிதாவுக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால் இப்போது அவளுக்கு எதிலும் நாட்டமில்லை... பாவம் ஸ்ரீராமுக்கு இது தெரிந்தால் அவன் சின்ன இதயம் பொடிப் பொடியாவது உறுதி...

இன்று கூடப் பெற்றோர்களின் கேள்விக் கணைத் தாக்குதலிலிருந்து தப்பிக்கவே நிகழ்ச்சியைப் பார்த்தாள். ஏனெனில் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து ஒரு நாள் கூடப் பார்க்கத் தவறியதில்லை. எக்காரணம் முன்னிட்டும்.

ஸ்ரீராமை எப்போது பார்த்தாலும், நேரிலும் சரி, திரையிலும் சரி ‘எப்படி எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருக்க முடிகிறது? இவனுக்குக் கவலைகளே இருக்காதா?’ என்ற கேள்விகளே மதுமிதாவைச் சுற்றும்.

ஆனால் அப்படித் தோன்றிய அடுத்த நொடியே, ‘தப்புத் தப்பு.. அப்படி நினைக்கக் கூடாது... இவனுக்குக் கவலைகள் அண்டாமல் இருக்க வேண்டும்...’ என உடனே அப்படி நினைத்ததற்காகத் தன்னையே திட்டிக் கொள்வாள்.

ஆனால் அவனுக்கும் கவலைகள் இருக்கிறது. அதை எதிர்கொள்ளும் விதத்தில் தான் வாழ்வின் சந்தோசம் உள்ளது என்பதைச் ஸ்ரீராம் புரிந்து கொண்டான் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

திரையில் கண் பதித்திருந்த மதுமிதாவுக்கு ஒன்றை மட்டும் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவள் வீட்டினுள் வந்தபொழுது இருந்த மனநிலைக்கு மாறாக உற்சாகம் பொங்கி வழிந்தது. காலையிலிருந்து மனதை வலிக்கச் செய்த வேதனைகளும், கவலைகளும் தளைகளை அறுத்துக் கொண்டு வெளியேறியிருந்தன.

ஸ்ரீராமை எவ்வளவு தவிர்த்தாலும் அவன் பேச்சு, செய்கை, அவன் அனுப்பும் செய்தி என அனைத்துமே அவள் மனதைச் செப்பனிட்டு விடுகிறது என்பதை அவளால் மறுக்க இயலாது.

‘நேரில் பார்க்காமலேயே அவனால் இதைச் செய்ய முடிகிறது என்றால் எந்நேரமும் அவனுடன் இருந்தால் வாழ்க்கை எத்தனை ரம்மியமானதாக இருக்கும? அப்படி இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்’ அடிக்கடி எழும் இந்த எண்ணத்தை அப்பொழுதும் அவளால் தடுக்கவே முடியவில்லை.

இவன் தங்களைப் போல் சாமானியன் அல்ல என்ற உண்மை ‘முப்பதுக்குள் முத்திரை பதித்தவர்கள்’ என்ற செய்தியை வெளியிட்டால் தெரிந்துவிடும்.

சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறான். இந்த இளம் வயதிலேயே ஓர் அனாதை இல்லத்தையே தத்தெடுத்திருக்கிறான். தொலைக்காட்சியின் மூலம் வரும் பணத்தில் ஒரு பகுதியை அதற்காகச் செலவிடுகிறான்.

அது போக, அவர்களின் தொலைக்காட்சியின் பெயரில் ஒரு ‘ட்ரஸ்ட்’ ஆரம்பித்துப் படிக்க முடியாத ஏழை குழந்தைகளின் படிப்புக்கான செலவுகளைக் கடந்த ஐந்து வருடங்களாகச் செய்து வருகிறான்.

இந்த இரண்டுமே அவனின் மேற்பார்வையில் நடப்பதால் எவ்விதக் குளறுபடியும் இல்லாமல் அவர்களுக்குத் தேவையான உதவிகள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

இந்த விஷயமெல்லாம் மதுமிதாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் தான் தெரியவந்தது. அதுவும் ஓர் இக்கட்டில், என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு வெதுப்பகம் சென்று தோழி ரஞ்சிதாவிடம் புலம்புகையில்.

அவள் எழுத வேண்டிய கட்டுரைக்கெனக் கடைசித் தருணத்தில் அவளுக்குப் பேட்டி தருகிறேன் என்று சொன்ன நபர் ஒருவரால் திடீரென்று பேட்டி தர முடியாமல் போய் விட்டது.

அனுபவம் இருந்திருந்தால் இம்மாதிரி இக்கட்டு வரும் என்று முன்பே யோசித்திருப்பாள். மேலும் இரண்டு பேரை வரிசைப் படுத்தியும் வைத்திருப்பாள். இந்தத் துறைக்குப் புதிது என்பதால் அதெல்லாம் அவளுக்குப் புரியவில்லை. உடனே டென்சனாகிவிட்டாள்.

“ஏண்டி, இப்படி டென்சனாகறதுக்குப் பதிலா ராம்கிட்டே பேட்டி கேட்கலாமே?” என ஆலோசனை வழங்கினாள் அவளின் புலம்பலைக் கேட்ட தோழி ரஞ்சிதா.

ஸ்ரீராமுக்குச் சாப்பிடுவதில் உள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. அதனால் அடிக்கடி இவர்களின் வெதுப்பகத்துக்கு வருவான். அப்படி ஏற்பட்ட பழக்கத்தில் தான் ரஞ்சிதா தயங்காமல் அந்த ஆலோசனையைத் தந்தாள்.

“அவனா?” என மதுமிதா புருவத்தைச் சுருக்கி யோசிக்க, “என்னை எல்லாம் பார்த்தா சித்திரையில் நித்திரைக் கொள்கிறவன் மாதிரி இருக்கும்... முத்திரை பதிக்கிற மாதிரி தெரிஞ்சிருக்காது...” என ஸ்ரீராமின் குரல் அவளருகில் ஆழ்ந்து ஒலித்தது.

பட்டெனத் திரும்பிப் பார்க்க, அவனின் ‘ட்ரேட்மார்க்’ புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

மதுமிதா புலம்ப ஆரம்பித்த உடனே வந்துவிட்டான். ஆனால் ஏதோ முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என ஒதுங்கி நின்றான். ஆனால் அவர்கள் தீவிரமாகப் பேசுவும், அவன் பெயர் அடிபடவும் அவர்கள் பேச்சில் இடையிட்டான் ஸ்ரீராம்.

“ச்சே... ச்சே... அப்படியில்லை ராம்” என உடனே மதுமிதாவின் வாயில் இருந்து பதில் வந்தது. ஆனாலும் மனம் மட்டும், ‘பின்னே ஏன் அவனிடம் முதலிலேயே கேட்கவில்லை... அவன் செய்யும் வேலை முத்திரைப் பதிப்பதைப் போல் உனக்குப் படவில்லையா?’ என மிரட்டியது.

“அப்போ பேட்டி கொடுக்க நான் ரெடி... ஃபோட்டோ போடுவ தானே?” என மதுமிதாவிடம் கேட்டவன், தலையை இரண்டு கைகளால் கோதிக் கொண்டு ரஞ்சிதாவிடம் திரும்பி, “என்னங்க ரஞ்சி, பார்க்க ஹான்ட்சம்மா இருக்கேனா?” என்றான்.

“பதிலைச் சொல்லிட்டு என் ஹஸ்பென்ட்கிட்டே இருந்து முறைப்பை வாங்கவா?” என அங்கிருந்த வேறொரு இளைஞனைச் சுட்டிக் கட்டினாள் ரஞ்சிதா.

ரஞ்சிதாவின் கணவன் இரவு அங்கே வந்து கடை மூடும் வரையில் இருந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்வான்.

“இதுக்கு நேரடியாவே நீங்க பதில் சொல்லி இருக்கலாம்.... உங்க பதிலே நான் ஹன்ட்சம்மா இருக்கேன்ன்னு இன்டைரக்ட்டா சொல்லிடுச்சு.... வா மது சீக்கிரம்...” என அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அவன் பதிலைக் கேட்டு ரஞ்சிதா சிரிக்க, அவனைக் கறிவேப்பிலையைப் போல் உபயோக்கிறோமோ என மதுமிதாவுக்குள் குற்ற உணர்வு தோன்றியது.

“ராம்...” என அவள் ஏதோ சொல்ல வர, “வேலையை ஆரம்பிம்மா... உனக்கு டைம் நிறைய இல்லை...” என அவளைத் துரிதப்படுத்த, அதற்குமேல் மதுமிதா தயங்கவில்லை. வேலையில் ஆழ்ந்தாள்.

அவள் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத வினாக்களுக்கும் அவன் பதிலளிக்க, அதை மும்முரமாகக் குறித்துக் கொண்டாள். அப்போது தான் அவளுக்குத் தெரிந்தது அவன் செய்யும் சமூகச் சேவைகளைப் பற்றி.

அதையும் அவன் ஏன் சொன்னான் என்று அவனே ஒரு விளக்கம் வேறு சொன்னான். “என்னைப் பார்த்துச் சிலர் மனம் முன் வந்து இது மாதிரி உதவினா அது பெருசில்லையா? அதுக்காக மட்டுமே சொன்னேன்...” என்றான்.

அது காரணமில்லை என்று அவளுக்குத் தெரியும். “உண்மையைச் சொல்லு ராம்...” என அழுத்தமாகக் கேட்க,

“வெளியில் சொல்லிடாத மது...” எனச் சுற்றும் முற்றும் பார்த்தவன், “யாரும் என்னைச் சாதனையாளனா மதிச்சுப் பேட்டி எடுக்கலை... நீ தான் முதல்... அதுவும் வாலண்டியரா நானே வந்து பேட்டி கொடுத்தேன்” எனச் சீரியசாகச் சொல்லவும் பக்கென்று சிரித்துவிட்டாள்.

ஆனாலும் அவளுக்கு அந்த பதில் திருப்தியைத் தரவில்லை. “சொல்லு ராம்... உன்னை மதிச்சு நான் பேட்டி கூட எடுக்கலை... ஒப்புக்குச் சப்பாணியா எனக்குத் தேவைன்னு உங்ககிட்டே கேட்கிறேன்...

அதைக் கூட மனசில வச்சுக்காம எப்படி உன்னால் இப்படி இருக்க முடியுது?” என மதுமிதா கேட்கவும், அதற்கு அவன் சொன்ன பதில் தான்  அவளை அவனிடமிருந்து தள்ளி நிறுத்தும் முடிவை எடுக்க வைத்தது.

“பேட்டின்னா சுவாரசியமா இருக்கணும்... ஏற்கனவே தெரிஞ்ச விஷயத்தை எழுதறதில் என்ன யூஸ்? மதுவோட பேட்டி அப்படி ஆகக்கூடாது... அதுக்காக என் கொள்கையைக் கொஞ்சம் தளர்த்தினா தப்பில்லை... என் மது சாதிக்கணும்... நீ கேட்டு முடியாதுன்னு சொல்ல எனக்கு எப்பவுமே மனசு வராது...” என்றான்.

உணர்ந்து சொன்னானா, இல்லையா எனச் சிரிப்பதை நிறுத்திவிட்டு அவன் கண்களை உற்றுப் பார்த்தாள் மதுமிதா. அவற்றில் ஒருவிதத் தீவிரம் பொதிந்திருந்தன. விழிகள் சிந்திய மெய்யான விளக்கத்தில் செயலிழந்து போனாள்.

அத்தோடு, ‘என் மது..’ என்றானே. எங்கே தவறவிட்டாள்? இவனுக்கு இப்படி ஓர் எண்ணத்தை எப்போது தூண்டிவிட்டாள்? அவன் மனதில் இருப்பதை அறியாமல் எப்படி இருந்தாள்?

யோசித்துப் பார்த்தால் அவளுக்கு ஏற்படும் இடர் ஒவ்வொன்றையும் இவன் தான் முன்வந்து சரி செய்து வைத்திருக்கிறான் என்ற உண்மை புலப்பட்டது.

‘ஏன் செய்கிறான்?’ என எல்லாவிதத்தில் யோசித்துப் பார்த்தாலும் விடை ஒன்று தான். ஸ்ரீராமுக்கு அவளைப் பிடித்திருக்கிறது.

இதை வளர விடக் கூடாது... கூடவே கூடாது... முடிவு கட்டிக் கொண்டாள். அதன் பிறகு தான் அவனிடமிருந்து வேலையைக் காரணம் காட்டி ஒதுங்க ஆரம்பித்தாள். அதன் வெளிப்பாடே அவன் அழைப்பை இன்று காலையில் தவிர்த்ததும்.

முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் ஓயாது அவனை அழைப்பாள்... இப்போது அவனுடன் பேசி முழுதாக மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அனைத்துக்கும் குறுஞ்செய்தி மட்டுமே.

“என்ன மது பண்ணிட்டு இருக்கிற... இந்தப் ப்ரோக்ராம் வந்தா சாப்பாடு தூக்கம் கூட மறந்துடுவியா?” என்றவாறே அறைக்குள் வந்த கல்யாணியின் குரலில் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தாள் மதுமிதா.

“பசிக்கலையா? நேரத்தோடு சாப்பிடச் சொல்லி எத்தனை தடவைச் சொல்லறது?” எனத் தொடர்ந்து கல்யாணி கேட்க,

“இதோ வரேன்ம்மா” எனத் தொலைக்காட்சியை அணைத்தவள், “ஹேர் ட்ரையர் ஆஃப் பண்ணியிருக்கான்னு பார்த்துட்டு வரேன்...” எனக் குளியலறைக்குள் சென்றாள்.

சில நொடிகளில் திரும்பி வந்தவள், “செமையாப் பசிக்குதும்மா.. வாங்க” என மதுமிதா ஓர் அடி எடுத்து வைக்க, “இப்போ தான் பசி தெரியுதா?” என நொடித்துக் கொண்டார் கல்யாணி.

அதே சமயம், அவள் அலைபேசி மெல்லிய ஓசை எழுப்ப, அதைப் பிடுங்கியவர், “எல்லாம் அப்புறம்... முதல்ல சாப்பாடு...” என்றார்.

ஆனால் திரையில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும், கைகள் தானாகவே உயிர்ப்பித்து, “சொல்லுப்பா ரகு... நல்லா இருக்கியா?” எனப் பேசத் துவங்கினார் கல்யாணி.

“ உங்க மகன் என்றதும்  உடனே உங்க கொள்கையைப் பறக்க விட்டுட்டீங்களே... இது நல்ல அம்மாக்கு அழகில்லை...” எனக் கிண்டல் செய்தவாறே உணவறைக்குச் சென்றாள்.

மகனிடம் பேசிய கல்யாணி, “கட் ஆகி... கட் ஆகிக் கேட்குது... அண்ணன் கொடுத்துவிட்ட ஃபோனை என்கிட்டே கொடுத்துட்டு நீ ஏன் இப்படி ஒரு டப்பாவை வச்சுட்டு இருக்கிற? திரும்பக் கூப்பிடுவான்... இந்தா நீயே பேசு” என மதுமிதாவிடம் அலைபேசியைத் தந்தார்.

“இது போதும்...” எனச் சொல்லியவாறே தட்டில் உணவை வைத்துக் கொண்டு கொறிக்க ஆரம்பித்தாள் மதுமிதா. அவள் தான் அமெரிக்காவில் இருக்கும் அண்ணனிடம் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து புது ஐ.போனை வாங்கிக் கொண்டு வரச் சொன்னாள்.

அப்படிக் கொண்டு வந்த கைபேசியை, ‘அடிக்கடி எங்கேயோ வச்சுட்டுத் தேடறேன்... காஸ்ட்லி ஃபோன்... அதனால் எனக்கு வேண்டாம்... நீங்களே வச்சுக்கோங்க...’ எனக் கூறிக் கல்யாணியிடம் தந்துவிட்டாள்.

அப்போது அவளது அலைபேசி மீண்டும் ஒலிக்க, எடுத்துப் பேசினாள். அண்ணன் ரகு மீண்டும் அழைத்திருந்தான். அவன் தன் இந்தியா வருகையைப் பற்றி அவளிடம் உற்சாகமாகச் சொல்ல, “இப்போ தானே வந்துட்டுப் போனீங்க... அதுக்குள்ளே என்ன அவசரம்?” என்றாள் மதுமிதா படபடவென்று.

“என்னடா ரகு இது? வரவேற்பு செமையா இருக்கு...” என அவன் தனக்குள்ளேயே பேசுவதைப் போல் பரிகாசம் செய்ய,

“அண்ணா... திடீர்ன்னு கிளம்பறேன்னதும் என்ன சொல்லறதுன்னு தெரியலை... இங்க ஆபீஸ்ல நிறைய வேலையிருக்கே... நீங்க வர்றப்போ லீவு கிடைக்குமோ என்னவோ... அதான்...” என அசடு வழிந்தாள் மதுமிதா.

“இன்னும் ஒரு மாசம் பக்கம் இருக்கே... அதுக்குள்ளே எல்லா வேலையும் முடி... உன் கல்யாண விஷயம் பேசணும்... என் ஃபிரெண்ட்...” என அவன் மேற்கொண்டு பேசும் முன்னால்,

“நீங்க இந்தியா வாங்க, இல்லை, வராமல் இருங்க... அதுக்கும் என் கல்யாணத்துக்கும் முடிச்சுப் போட கூடாது... எனக்குக் கல்யாணம் வேண்டாம்...” என எரிச்சலானாள் மதுமிதா.

இவனுக்கு இப்போதெல்லாம் இதுவே வேலையாகப் போய்விட்டது. எப்போது பார்த்தாலும், திருமணம், மாப்பிள்ளை என உயிரை வாங்குகிறான்.

“மது, என் ஃபிரெண்டுடா... யூ.எஸ்.ல என்னோட எம்.எஸ். பண்ணினான். இப்போ சென்னையில் சொந்தமாத் தொழில் பண்ணறான்... உனக்கு அவனைப் பிடிக்கும்... வந்து பேசிக்கலாம்...” என்றான்.

“அண்ணா ப்ளீஸ்....” என மதுமிதா சிணுங்க, “ஆக மொத்தம் எனக்கு ரூட் கிளியராக விட மாட்ட போலிருக்கே...” என்றான் ரகு கிண்டலாக.

“எனக்குக் கல்யாணமானாத் தான் உங்களுக்குக் கல்யாணம் செய்யணும் என எங்காவது எழுதி வச்சிருக்காங்களா?” என மதுமிதா படபடவெனப் பொரிய,

“மது... யாரையாவது லவ் பண்ணறியா? சொல்லு...” என நேரடியாக அண்ணன் விஷயத்துக்கு வரவும், நடக்கவே நடக்காது என்கையில் இவனிடம் என்ன சொல்வது என மலைத்தாள் தங்கை.

அவள் பேசாவிட்டால் அதையும் தப்பாக அர்த்தம் கொண்டு வேறேதாவது ஊகம் செய்து கொள்வான் என உணர்ந்தவள், உடனே சுதாரித்து, “கல்யாணம் வேண்டாம்ன்னா உடனே லவ்வா? முதல்ல வாங்க... அப்புறம் பேசிக்கலாம்...

ஆனா, உங்க ஃபிரெண்டுக்கு நம்பிக்கைக் கொடுத்தா அதற்கு நான் பொறுப்பில்லை... சொல்லிட்டேன்” என அண்ணன் சொன்னதற்குப் பிடிவாதமாகப் பதில் சொல்லவும் மறக்கவில்லை.

“சரிடா... இங்கிருந்து என்ன வேணும் சொல்லு?” என ரகு கேட்க, “எல்லாமே இருக்கு... நீங்க பத்திரமா வாங்க... பை...” என உடனே அழைப்பை வைத்தாள்.

மறுமுனையில் அழைப்பை வைத்த ரகுவின் முகத்தில் சிந்தனை ரேகை. முன்பெல்லாம் அவளுக்கு ஏதாவது வேண்டும் என்றால், “நீங்க எப்போ இந்தியா வர்றீங்க?” என நச்சரிக்கும் தங்கை... அவன் வருகிறேன் என்றதும், நீண்ட பட்டியல் போடும் தங்கை.

இப்போது அவளுக்கு என்ன ஆகிவிட்டது? இதற்கு விடை கண்டுபிடிக்கவாவது அவன் இந்தியா செல்வது அவசியம் என நினைத்தவாறே வேலையில் ஆழ்ந்தான் ரகு.

அண்ணனுடன் பேசி முடித்த மதுமிதாவிடம், “ரகுகிட்டே ‘ஐ போன்’ வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியது தானே...?” எனக் கல்யாணி சொல்ல, “இதுவே போதும்மா... இதில பேசினா எனக்கு நல்லாக் கேட்குது... அப்புறமென்ன?” என வாயில் உணவைத் திணித்துக் கொண்டாள்

அவளைச் சற்றுநேரம் ஊடுருவிப் பார்த்தவர், “மது, அப்பாவோட ஃபிரெண்ட் வாசு அங்கிள் பொண்ணுக்கு வளைகாப்பு... நாளைக்கு நேரத்திலயே கிளம்பிடுவோம்” என்றார் அவளருகில் அமர்ந்தவாறே.

“சரிம்மா... நீங்க ஒண்ணும் செஞ்சு வைக்காதீங்க... நான் பாத்துக்கறேன்” என்ற மதுமதி, அதிவேகமாகச் சாப்பிட்டவள், தட்டை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு ஓடினாள்.

இல்லையென்றால் கல்யாணி அடுத்து என்ன சொல்வார் என்று அவளுக்குத் தெரியாதா? “உன்னை விடச் சின்னப் பொண்ணு... கல்யாணம் பண்ணி இப்போ குழந்தையும் பிறக்கப் போகுது” என ஆரம்பிப்பார்.

இறுதியில் அவள் அண்ணன் சற்றுமுன்னர் சொன்ன அவளின் திருமணத்தில் வந்து நிற்கப் போகிறது. ‘வேண்டாம்... வேண்டவே வேண்டாம் இந்தப் பேச்சு’ என நினைத்தவள், மீண்டும் முன்னறைக்கு வந்து,

“தூக்கம் வருதும்மா... நானும் நாளைக்குச் சீக்கிரம் கிளம்பணும்.. குட்நைட்” எனத் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அன்னையிடம் சொன்னதைப் போல் அவளுக்கு அன்று உறக்கம் வரும் என்று தெரியவில்லை. மனம் அப்படி நினைக்க மூளையோ கண்களுக்குக் கட்டளையிட்டு இமைகளை மூடச் செய்தது.

அவளின் இமைகள் தழுவ, அவளவன் விழிகளுக்குள் வந்து தடம் பதித்தான். ‘யாருக்கு என்ன செய்தார்கள்? இப்படிப் பிரிந்து கிடக்கிறார்கள்?’ என்ற எண்ணத்தை தூக்கத்திலும் அவளால் உதற முடியவில்லை.

அவளவன் தீயின் ஜ்வாலைக்குள் நின்று கொண்டிருந்தான். ‘ஐயோ’ என இவள் அவனை எட்டிப் பிடிக்க விழைய அவளால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தணலுக்குள் நின்று கொண்டிருப்பதைப் போல் உடல் எல்லாம் எரிய ஆரம்பித்தது மதுமிதாவுக்கு.

அவளால் சற்றும் அசைய முடியவில்லை. இந்தப்புறம் இவளை யாரோ பிடித்து நிறுத்தி வைக்கிறார்கள்... யாரென்று அவள் முகம் திரும்பிப் பார்க்க நினைத்தாள்.... முடியவில்லை... திமிறி விலக நினைத்தாள்... பலனில்லை.... அப்படி ஓர் உடும்புப் பிடி...

‘என்னை விடு’ என மனம் நினைத்ததைச் சொல்ல தொண்டைக்குழி ஒத்துழைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலை. எதுவும் செய்ய முடியாது என்ற நிலை.

‘கிணி... கிணி...’ என்ற சத்தம் காதுக்குள் ஒலிக்க, பட்டென்று அவள் விழிகள் திறந்தன.

கைபேசியில் ஸ்ரீராமின் செய்தி வந்திருந்தது... “உனக்குப் போட்டியா வரவேண்டாம்ன்னு சுமாரா கவிதை எழுதறேன்... இல்லை, அடுத்த மதன் கார்க்கி நான் தான்...” என அனுப்பியிருந்தான்.

‘ரொம்பத் தான் நினைப்பு’ எனத் தட்டிவிட்டவள் அதன்பின்னர் வெகுநேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

மறுநாள் காலையில் அலுவலகத்துக்குச் செல்ல பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் மதுமிதா. நேரம் கழித்துக் கண் உறங்கியதாலோ என்னவோ காலையில் விழிப்புத் தட்டுகையில் பொழுது நன்றாகவே புலர்ந்திருந்தது.

பெற்றோர்கள் வீட்டில் இல்லை. அதுவும் நல்லதுக்குத் தான். இரவு சரியாகத் தூங்காததால் கண்கள் செவ்வரி ஓடிக் காணப்பட்டன.

அரக்கப் பறக்கக் கிளம்பி, சமையலறைக்கு வந்தாள். தோசை சுட்டுச் சாப்பிட்டுவிட்டுக் கிளம்ப வேண்டும்.. அம்மா வெளியில் சென்றிருக்கும் பொழுது தான் அவரின் அருமை பெருமையெல்லாம் புரியும்.

சாப்பிடாமல் செல்லவும் அவளால் முடியாது. எங்கேயாவது மயங்கிச் சரிந்துவிட்டால் யார் அவளை வீட்டில் சேர்ப்பது?

முன்பொருமுறை அப்படி நடந்திருக்கிறது. அதனால் கல்யாணி அவளிடம் சத்தியம் வாங்காத குறையாக, ‘என்ன ஆனாலும் சரி... சரியான நேரத்தில் சாப்பிடு.. இல்லை, இந்த வேலையை விடு’ எனச் சொல்லியிருந்தார்.

வேலை ஒரு பக்கம்... அவள் அன்னையின் கண்ணீர் மறுபக்கம் என மிரட்ட, அதை அவளால் மீற முடியவில்லை.

சமையல்கலையில் பட்டம் பெற்றதால் தோசை சுடுவது ஒன்றும் அவளுக்குச் சிரமமாக இல்லை. ஆனால் அப்போது அங்கே நேரமில்லை என்பது தான் குறை.

இரண்டே இரண்டு தோசைகளைச் சுட்டுச் சாப்பிட்டவள், ‘டாண்’ என்று எட்டரை மணிக்குத் தன் ஸ்கூட்டியில் கிளம்பிவிட்டாள்.

வெளியில் வந்த பின்னர் தான் அடுப்பை அணைத்தோமா என்ற சந்தேகம் வந்து தொலைத்தது. பூட்டியிருந்த கதவைத் திறந்து ஒருமுறைக்குப் பலமுறை அடுப்பை அணைத்து விட்டதை உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அலுவலகம் கிளம்பினாள்.

எத்தனை முயன்றும் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகத் தான் அலுவலகத்துக்குச் செல்ல முடிந்தது. யார் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தீவிரமாகத் தன் வேலையில் மூழ்கியிருக்க, அவள் எழுதுவதாக இருந்த கட்டுரையின் ‘ப்ரூப்’ பார்க்க, விக்னேஷ் அழைத்திருந்தான்.

அவன் அறைக்குச் சென்றதும், “கிஷோர் எழுதியதை வாசித்துப் பார் மது...” என அவளிடம் ஒரு பத்துப் பக்கத்தைத் தந்தான்.

“நிறைய வாசி மது... அப்போ தான் எழுதறது சுலபமா வரும்...” என விகேன்ஷ் சொல்ல, விக்னேஷ் தந்ததை அங்கேயே அமர்ந்து வாசித்தாள்.

அக்கட்டுரையைப் படிக்க, படிக்க அவள் மனம் கொதிநிலையை அடைந்தது. பின்னே அவள் எழுதித் தந்த கட்டுரையில் ஆங்காங்கே சில வார்த்தைகளைச் சேர்த்தும், நீக்கியும், வேறு வார்த்தைப் போட்டும் எழுதியிருந்தான் கிஷோர். அவ்வளவே...

இதைத் தான் ஒன்றுக்கும் உதவாது என்று மட்டம் தட்டினானா கிஷோர்? அவள் முக மாறுதல்களைப் பார்த்து தவறாக ஊகித்த விக்னேஷ், “புரியுது மது... ஆரம்பத்தில எழுதச் சிரமமா இருக்கும்.. போகப் போகச் சரியாயிடும்...” என்றான்.

அதை எடுத்துக் கொண்டு விடுவிடுவென்று கிஷோரின் அறைக்குச் சென்று அவன் முன்னால் தூக்கிப் போட, ‘என்ன திமிர் இவளுக்கு? பாஸ் என்கிற மரியாதை வேண்டாம்?’ எனப் புகைந்தவன், “ஆர்டிகில் பார்த்தியா?” என்றான் ஒருவித தெனாவெட்டுடன்.

“நான் எழுதினதையே கொஞ்சமா மாத்தி அதைப் பப்ளிஷ் செய்யப் போறீங்க... அப்புறம் எதுக்கு என் மூஞ்சியில் விட்டெறிஞ்சீங்க?” என்றாள். இவனுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு என்ற எண்ணம் மனதில் ஓடாமலில்லை.

“முக்கியமான வார்த்தைகளை விட்டா பொருள் மாறிடுமே... தெரியா... தா?” எனக் கிண்டலாக வினவ, அவன் மண்டையில் ‘நங்.. நங்’கென்று கொட்ட வேண்டும் என்ற ஆத்திரம் கிளம்பியது அவளுக்கு.

அவள் ஒன்றும் அப்படி மோசமாக எழுதவில்லை. அதை ஒத்துக் கொள்ள இவனுக்குப் பிடித்தமில்லை. இப்போது போய் ‘நான் எழுதியதைக் கொஞ்சமா மாத்தி எழுதியிருக்கார்  கிஷோர்’ என வெளியில் சொல்ல முடியுமா?

சிறுபிள்ளைத் தனமான செயல் அஃது. அத்தோடு இவள் எது சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை என்பது வேறு விஷயம். புதிதாக வேலைக்குச் சேர்ந்த அவளைப் பற்றி இங்குள்ளவர்களுக்கு என்ன தெரியும்? விக்னேஷ் உட்பட...

அதுவும் கிஷோர் என்றால் இங்கே உள்ளவர்களுக்கு மரியாதை. அறிவாளி தான். என்ன அந்த அறிவைச் சில்லறை விஷயத்தில் சிதற விடுவான். அனைவரிடமும் சிரித்த முகமாகப் பழகுவான். மற்ற பெண்களிடமும் சிரிக்க, சிரிக்கப் பேசுவான்.. ஆனால் இதுவரையில் அவர்களிடம் அத்துமீறியதாகத் தெரியவில்லை.

தோழி மகிழ்வினியின் வாழ்வில் நடந்ததை அருகிலிருந்து பார்த்ததால் யாரையும் எளிதில் நம்பும் குணத்தை விட்டிருந்தாள் மதுமிதா. அதனாலேயே கிஷோரிடமிருந்து ஆரம்பத்திலேயே விலகி இருந்தாள்.

மகிழ்வினியின் தோழன் என்று சொல்லிக் கொண்டவன், பெண்களை மறைமுகமாக வீடியோ எடுத்துப் பணம் பண்ணிக் கொண்டிருந்தான். இறுதி வரையிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை...

அது தந்த அனுபவத்தால் கிஷோரின் இந்தக் குள்ளநரித்தனத்தை எளிதில் புரிந்துக் கொண்டாள். ஆனால் உடன் வேலைச் செய்பவர்கள் அவள் சொல்வதை நம்புவார்களா, இல்லை, இந்தப் பத்திரிக்கையின் ‘அரை-முதலாளி’ கிஷோர் சொல்வதையா?

‘அரை முதலாளி தான்... அரைக் கிறுக்கன் மாதிரி’ எனத் தோன்ற அவளுக்குப் புன்னகை அரும்பியது.

‘இவனிடம் இனி ஜாக்கிரதையாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்...’ என நினைத்தவாறே எதுவும் சொல்லாமல் தன் இருக்கைக்குச் சென்றாள் மதுமிதா.

மதுமிதாவின் புன்னகை கிஷோரின் ஆத்திரத்துக்குத் தூபம் போட்டது. பின்னே அவன் எட்டு திக்கிலுமிருந்தும் அவளுக்கு இடைஞ்சலைத் தந்தால் ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு இருக்கிறாள்.

 ‘இவளை எதால் செய்தார்கள்? எத்தனை தட்டினாலும் தாங்குகிறாளே? வலிக்க, வலிக்க அடிக்க வேண்டும்... எழ முடியாத அளவுக்கு அடிக்க வேண்டும்... எத்தனை தைரியம் இருந்தால் என்னைப் பார்த்துச் செருப்புப் பிஞ்சிடும் எனச் சொல்லுவாள்?’ மனம் குமுறிக் கொண்டிருந்தது அவனுக்கு.

அவன் செய்த தவறை அவன் தவறாகவே கருதவில்லை. ‘ஊர் உலகத்தில் நடக்காததா? கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போனால் என்னவாம் இவளுக்கு? திமிர்... அவன் தயவில்லாமல் அவ்வளவு எளிதாக அவளை முன்னேற விட்டுவிடுவானா? அவன் காலடியில் விழ வைத்து அவளைக் கெஞ்ச வைக்க வேண்டும்’

மதுமிதா இருக்கைக்குச் செல்லும் வரையில் காத்திருந்தவன் அவள் சென்றமர்ந்ததும், அமைதியான நடையில் அவள் இருக்கைக்கு வந்து, “பேசி முடிக்கறதுக்கு முன்னாடியே இப்படி நடுவில் வந்தா என்ன அர்த்தம்?” என்றான்.

“அத்தோடு வேலைக்கு வேற லேட்...இப்படி இருந்தா வேலை எப்படி நடக்கும், இல்லை, வேலையில் எப்படிக் கவனமிருக்கும்” என்றான் உரத்தக் குரலில்.

வேண்டுமென்றே அனைவரின் முன்னால் அவள் தவறைச் சுட்டிக் காட்டும் செயல். அவள் இனி என்ன செய்தாலும் அதில் குறை இருக்குமோ என எண்ண வைக்க வேண்டும் என்ற சதி.

‘டேய்... நீ என்கிட்டே ஒருநாள் நல்லா வாங்கப் போற...’ என வாய்விட்டே அவனுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தவள், “சாரி சார்... இனி அப்படி நடக்காது” எனத் தன் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் மதுமிதா.

அனைவரும் பார்க்க மன்னிப்புக் கேட்டவளை இனி அவனால் என்ன செய்ய முடியும்?. அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான்.