திருமதி லாவண்யா எழுதிய இதழில் கதையெழுது...

அத்தியாயம் - 3

அன்றிரவு ஒன்பது மணிக்குத் தன் அலுவகத்தில் வேலையை முடித்துக் கொண்டு வெளியில் ஸ்ரீராம் வந்த பொழுதும் மழை நின்றபாடில்லை. அவன் காரை சர்வீஸுக்கு விட்டதால் வாடகைக் காரில் செல்ல வேண்டும் என மழையில் நனைந்தவாறே சாலைக்கு வந்தான்.

‘மின்னல்கள் கலகலவெனச் சிரிக்க

மேகங்கள் டமடமவென மோத

பூமியில் சடசடவெனத் தூறல்கள் சிதறுகிறது...’ என வாய்க்கு வந்ததைச் சொன்ன ஸ்ரீராம்,

“அட ராம்... பின்னற... கவிதை... கவிதை...” என விசிலடித்தான். அப்போது அவனைக் கடந்து சென்றவர், ‘கர்..’ எனக் காறிச் சாலையோரம் உமிழ்ந்தார்.

“ஹலோ... இதெல்லாம் ஓவர்... என் திறமையைப் பத்தித் தெரியாம இப்படி ரியாக்ட் பண்ணக் கூடாது” எனச் சத்தமாகச் சொல்ல,

‘தற்செயலாகச் செய்த செயலுக்கு இவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான்? யாரடா இவன் லூசு?’ என்பதைப் போல் முறைத்துவிட்டுத் தன் வழியைப் பார்த்துக் கொண்டு சென்றார்.

‘ஆல் பொறாமை...’ என முணங்கியவாறே கைபேசி எடுத்துப் பார்க்க, மதுமிதாவின் செய்தி வந்திருந்தது.

நேரம் பார்த்தவன் ஒன்பது மணிக்கு மேலே ஆகிவிட்டதால் அழைக்க வேண்டாம் என முடிவு செய்து, ‘தேங்க்ஸ்... சிந்திய இரத்தத்தைச் சேமித்து வை... நாளை உனக்கே தேவைப்படும்... ஏன்னா நாளையும் கடி ஃபோன் தேடி வரும்...’ எனப் பதிலுக்குத் தட்டிவிட்டவன்,

கூடவே அவன் கவிதை எனச் சற்றுமுன்னர் புனைந்ததையும் ‘ஃபீலிங்சோ’டு அவளுக்குப் ‘பார்சல்’ செய்து அனுப்பிவிட்டு அங்கு வந்த டாக்ஸியில் ஏறி வீடு நோக்கிச் சென்றான்.

வீட்டுக்குச் சென்ற ஸ்ரீராமை முறைத்தவாறு வரவேற்றார் அன்னை, சரோஜா. “அய்யனார் இப்படி நின்னா தப்பில்லை... ஆனா தாயார் அப்படி நின்னா சின்னப் பையன் நான் பயந்திடமாட்டேன்?” என்றவாறே கையைக் கழுவிட்டு உணவு மேஜையில் அமர்ந்து,

“ரா. ரா...” எனச் சந்திரமுகியின் பாட்டைத் தாளம் போட ஆரம்பித்தான்.

“டேய்.. என்னைப் பார்த்தா உனக்குச் சந்திரமுகி மாதிரி இருக்கா? கொன்னுடுவேன் படவா... என்னமோ டீ.வி.ல என் அம்மா தேவதைன்னு டிராமா பண்ணின...” என அவனுக்குத் தட்டை எடுத்து வைக்க, அவனே தனக்கு வேண்டிய உணவைப் பரிமாறிக் கொண்டவன்,

“ப்ரோக்ராம் பார்த்தீங்களா?” எனக் கேட்டு பதிலை எதிர்பாராமல், “வேற என்ன பண்ணறது? ‘கேர்ள் ஃபிரெண்ட்டா’ இருக்கு அவளைத் தேவதை எனப் புகழ?” என அவரைப் பார்த்துக் கண்ணடிக்க,

“அப்படியெல்லாம் யாரையாவது கொண்டு வந்து நிறுத்தின அடி வாங்கப் போற” என அவரும் அவனருகில் அமர்ந்தார்.

அவர் ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல வருகிறார் என அவரின் முகத்தில் இருந்தே கண்டுபிடித்துவிட்டான். அவர் முகம் ஏனோ அதீத குழப்பத்தில் இருப்பதாகப் பட்டது.

‘ஃபோர்’கால் ‘நூடுல்’ஸை எடுத்து அவன் முகத்தின் முன்னால் வைத்துக் கொண்டு, “ஃபோர்கில் நூடுல்ஸ் தொங்கலாம்... வாயில் கூடத் தொங்கலாம்...” என வாய்க்குள் திணித்துக் கொண்டவன், ஃபோர்க்கை கீழே வைத்துவிட்டு,

அன்னை சரோஜாவின் முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி, “ஆனா, இந்த மம்மியோட முகம் நூடுல்ஸ் மாதிரி தொங்கலாமா?” என்றான்.

“முதல்ல மம்மின்னு சொல்லறதை நிறுத்துடா...” எனச் சரோஜா அவனிடம் சண்டைக்குப் போக, “அம்மான்னா சும்மான்னு சொல்லிடுவாங்க... அதான் மம்மின்னு சொல்லறேன்” என்றான் ஸ்ரீராம்.

“எதுக்கு உன் அப்பாவோட சேர்ந்து என்னை டம்மின்னு சொல்லவா? ஊருக்கு நல்ல பிள்ளை... வீட்டுக்கோ ஒண்ணும் கொள்ளாது...” என முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“ச்சே.. கவிதை எழுதற எனக்கே உங்க கவிதை புரிய மாட்டேங்குது... கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்...க ரோசா...” எனச் சொல்ல,

“டேய்... அது பழமொழிடா...” எனத் தன்னருகில் இருந்த நாற்காலியின் குஷனை எடுத்து அவன் மேல் மொத்தினார்.

“அம்மா... தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளையை அடிக்கக் கூடாதுங்கிறது தெரியாது...” என ரூல்ஸ் பேசியவன், “பழமொழி எனத் தெளிவாச் சொல்லுங்க.. நான் கூட நம்ம ரோசா எனக்குப் போட்டியா கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாங்க என ஜெர்க் ஆயிட்டேன்...” என்றான்.

“பேச்சைக் குறைடா... இஃது ஒண்ணும் உன் டீ.வி. பிரோக்ராம் இல்லை...” என மகனை வார, “சித்திரமும் கைப்பழக்கம்” என்றான்.

“என்னடா உளர்ற?” எனச் சரோஜா புரியாமல் விழிக்க, “பழமொழி! தெரியலை... டூ பேட்... எப்பவும் ப்ராக்டீஸ் பண்ணினாத் தான் டீ.வி.ல பேச வரும்...” எனச் சொல்ல, சரோஜா பக்கென்று சிரித்துவிட்டார்.

“ஊர்ல இருக்கறவங்க பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிற என் வீட்ல பிரச்சனையா? எனக்கு அம்மாவா வீட்ல சும்மா இருக்கிற உங்க முகம் ஏன் டிம்மா இருக்கு?” என்றவன், மீண்டும் உணவை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டு,

உடனே, “நீ தான் என் பிரச்சனையே என என்னையே கலாய்க்கக் கூடாது...” என்றார்.

மகனின் துள்ளலான பேச்சில் சில நொடிகள் வாய்விட்டுச் சிரித்தவர், உடனே முகத்தை மீண்டும் சீரியஸ் மோடுக்கு மாற்றிக் கொண்டு, “ஸ்வேதா, கூட வேலை பார்க்கிற பையனைக் காதலிக்கிறாளாம்...” என ஒருவழியாக விஷயத்தைச் சொன்னார்.

சில நாட்களாக அவனுக்கும் அந்தச் சந்தேகம் இருக்கவே செய்தது. ‘ரீட் பிட்வீன் த லைன்ஸ்’ என ஆங்கிலத்தில் சொல்வார்களே. தங்கையின் பேச்சிலிருந்தே அதன் உட்கருத்தைப் புரிந்து கொண்டான். அவளாகச் சொல்லட்டும் என்றே காத்திருந்தான்.

சரோஜாவுக்கு மகளின் வாழ்வை நினைத்துப் பயம். மகள் காதலிக்கிறவன் நல்லவனா என்ற கலக்கம். பணத்துக்காக மோசம் செய்யாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை. அதனால் முகம் முழுவதும் குழப்பம் தீராமல் அமர்ந்திருந்தார்.

“அமெரிக்காவுக்குப் போனா லவ் பண்ணாம இருக்க மாட்டா எனத் தெரியும்... இதுக்குத் தான் அவளைப் போக வேண்டாம் எனச் சொன்னேன்......” எனப் புலம்பலை சரோஜா தொடர,

“அம்மா, இது என்ன புதுப் புரளியா இருக்கு? அமெரிக்கா போனா மட்டும் லவ் வராதும்மா... எங்கே இருந்தாலும் லவ் வரும்...” என ஸ்ரீராம் சொல்ல, “அப்போ நீயும் யாரையோ லவ் பண்ணறியா?” என அவனையே திருப்பித் தாக்கினார்.

“ஏம்மா... லவ்க்குச் சப்போர்ட் பண்ணினா உடனே நானும் லவ் பண்ணறேன்னு அர்த்தமா? ஒருத்தரோட அன்புக்கு மரியாதை செய்யணும்மா...” என்றான்.

“அப்படிங்கற?” எனச் சரோஜா கேள்வியாக மகனைப் பார்க்க, “ஆமாம்மா... நல்ல அம்மாவா, இலட்சணமா பையன்கிட்டேயிருந்து நல்ல விஷயத்தைக் கத்துக்கோங்க...” என்றான்.

“சரி... நீ உன் தங்கையோட அன்புக்கு மரியாதை செய்... அதே மாதிரி நான் அன்பு வைக்கிற பொண்ணை இந்த வீட்டுக்குக் கொண்டு வந்து என் அன்புக்கும் மரியாதை செய்... ” என அவனை மடக்க நினைக்க,

முன்னறையில் தொலைக்காட்சியில் கண் பதித்திருந்த பார்த்தசாரதியைப் பார்த்து, “அப்பா... இந்த அம்மா எனக்கும் போர்... உங்களுக்கு ஓகேவா? நீங்களும் வேறப் பொண்ணு வேணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்களே...

எப்போ போகலாம் அம்மாவுக்குப் பிடிச்ச பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வர?” என ஸ்ரீராம் சாப்பிடும் வேலையில் மும்முரமானான்.

“டேய்... உன்னை...” என அவன் காதைத் திருகிய சரோஜா, “உன் கல்யாணமாவது என் இஷ்டத்துக்கு நடக்கட்டுமே... ஸ்வேதா விஷயத்தில் இனி அது வாய்ப்பில்லை.... எனக்கு அந்த ஆசை இருக்காதா? ப்ளீஸ்டா” என மிகவும் உணர்ச்சிகரமாகப் பேச, மதுமிதாவின் முகம் ஸ்ரீராமின் கண் முன்னே மின்னி மறைந்தது.

‘ச்ச்..சூ... ச்ச்சூ இப்படி ஒரு லாக் வச்சுட்டாங்களே அம்மா...’ என மனதுக்குள் ஃபீல் செய்து உச்சுக் கொட்டியவன், ‘ஏன் எல்லா அம்மாக்களும் இப்படி வில்லி டிசைன்லேயே லாக் வைக்கறீங்க?’ என முணுமுணுத்தான்.

“என்னடா முணுமுணுக்கற..” எனச் சரோஜா அதட்ட, “அம்மா, உங்களுக்குப் பிடிச்சப் பெண்ணை மட்டுமே கல்யாணம் பண்ணுவேன்... முதல்ல அம்மாவின் முகம் டிம்மா இருந்த காரணத்தைப் பற்றிப் பேசலாம்...” என அவர் முகத்தை மலரச் செய்து,

“ஸ்வேதா லவ் பண்ணற பையன் யாருன்னு விசாரிச்சீங்களா?” என ஆரம்பித்த பேச்சுக்கே மீண்டும் வந்தான்.

“கேட்டேன்... நேர்ல வந்து பையன் பேசுவானாம்... பேரைக் கூடச் சொல்ல மாட்டேங்கிறா...”

“இந்தச் சின்னப் பிரச்சனைக்குத் தான் நூடுல்ஸ் மூஞ்சியை வச்சுட்டு இருக்கறீங்களா? பேரைச் சொல்லாட்டி  என்ன, நம்ம காது குத்திப் பேர் வச்சிடலாம்...”

“எதுடா சின்னப் பிரச்சனை? யாருன்னு கேட்டா அதைச் சொல்ல கூட அவளுக்குத் தயக்கம்.. அப்போ அந்தப் பையன் எப்படிப்பட்டவனா இருப்பான்? ஒருவேளை அமெரிக்கனா இருப்பானோ?” என மகனைக் கேள்வியாக நோக்க,

“அம்மா... தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை எழுப்பலாம் தப்பில்லை... ஏன்னா அது கூண்டுக்குள்ள இருக்கும்... தப்பிச்சிடலாம்... ஆனா, உங்க கற்பனைக் குதிரையை மட்டும் தட்டி எழுப்பிடாதீங்க... ரொம்பக் கேவலமா இருக்கும்.... தப்பவே முடியாது....” என்றான்.

“டேய்... திரும்பத் திரும்ப உனக்கு ஞாபகப்படுத்தணுமா? இது டீ.வி.யில்லைன்னு” என அவர் கடுப்பாக, “அம்மா, நம்ம ஸ்வேதா பத்தி உங்களுக்குத் தெரியாதா? எது செஞ்சாலும் சரியாத் தான் செய்வா...” என்றான்.

உண்மையே... மகனையும் சரி, மகளையும் சரி ஒரே விதமாக எவ்வித ஏற்றத் தாழ்வும் காட்டாமல் வளர்த்தார்கள். நல்லது, கெட்டது எது என ஆராய்ந்து பார்க்கத் தெரியாதா அவளுக்கு? ஆனாலும் பெத்த மனம் அல்லவா?

உணவை முடித்துக் கொண்டு மீண்டும் அன்னையின் அருகில் சென்றவன், “அம்மா, உங்க திறமையே திறமை... நூடுல்ஸை உப்புமா மாதிரி பண்ண உங்களால் மட்டுமே முடியும்... சமையல் கத்துக்கோங்க எனச் சொன்னாக் கேட்கறீங்களா?” என அவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான்.

“டேய்....” என அவர் முறைக்க, “நிஜமா அம்மா... டீவில எத்தனை சமையல் ப்ரோக்ராம் வருது... பார்த்துக் கத்துக்கோங்க” என்றான்.

“கவலையா இருக்கறப்போ பண்ணினேனா, நூடுல்ஸ் கலவையா மாறி உப்புமா ஆகிடுச்சு...” என்றார் சரோஜா முகத்தைச் சீரியசாக வைத்துக் கொண்டு.

இது தான் ஸ்ரீராமின் குடும்பம். எந்நேரமும் கலகலப்பாகப் பேசிக் கொண்டும், ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் அதில் அன்பும், அக்கறையும் மிகுந்தே காணப்படும்.

இல்லையென்றால் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட பார்த்தசாரதியின் உடல்சுகவீனத்தை அவர்களால் எளிதாகக் கடந்திருக்கவே முடியாது.

குடும்பத்தில் யாராவது ஒருத்தர் மனம் சுணங்கிக் காணப்பட்டாலும் ஸ்ரீராம் அவன் பேச்சாலேயே அவர்களைச் சரி செய்துவிடுவான். அந்த வல்லமை அவனிடத்தில் இருந்தது.

“ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க....” எனத் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தவன், “இப்போ ஸ்வேதா என்ன தான் சொல்லறா?” என்றான்.

“ஸ்வேதா லவ் பண்ணற பையனோட தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணிட்டுத் தான் இவங்க கல்யாணத்தைப் பத்தி யோசிப்பாங்களாம்...” என முகத்தை மீண்டும் உம்மென்று வைத்துக் கொண்டார்.

“அதுக்காக அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எனக்கு ரூல்ஸ் போடக் கூடாது... இருங்க ஸ்வேதாவைக் கூப்பிடறேன்...” எனத் தங்கையை அழைத்தான்.

அழைப்புப் போய் கொண்டிருக்க, “அம்மா... இதிலிருந்தே தெரியலையா பையன் நம்ம ஊரென. அமெரிக்கன்ஸ் எல்லாம் இப்படித் தங்கை செண்டிமெண்ட்ல ஊறினவங்க இல்லை” என்றான் அன்னையிடம்.

“அட ஆமாம்..” எனச் சரோஜா மலர, “அப்போ காதலுக்கு எதிரியில்லை நீங்க...” என அவன் சொல்லும் பொழுதே, “அண்ணா... என்ன இந்நேரத்தில... ஆபீஸ்ல இருக்கிறேன்...” என ஸ்வேதா மறுமுனையில் வந்தாள்.

“நிஜமா உன்னைக் கூப்பிடுவேன்ன்னு உனக்கு டவுட் கூட வரலை இல்லை...” எனக் கிண்டலாக ஸ்ரீராம் வினவ,

“இல்லைண்ணா... சத்தியமா... யார் மேலே சத்தியம் பண்ணட்டும்...” என்றாள்.

“அடப்பாவி... என் மேலே பண்ணி வச்சுடாத... அப்புறம் என் வருங்கால வைஃப் பாவம்...” என்றான்.

“என்ன அண்ணா... ஆள் ரெடி பண்ணிட்டீங்களா?” என ஸ்வேதா கேட்க, “ஏண்டி... நீ கெட்டது பத்தாது... இனி அவனையும் கெடுக்கணுமா?” எனச் சரோஜா இடையிட்டு அதட்டினார்.

“ஸ்பீக்கர்ல போட்டிருக்கறதைச் சொல்ல வேண்டியது தானே” என அண்ணனைக் கடிந்து கொண்டவள், “யாரு... நான்? உங்க பிள்ளையை நான் கெடுக்கறேன்... எல்லாம் நேரம்...” என்றாள் ஸ்வேதா.

“ஸ்வேதா, நீ லவ் பண்ணினதை மறைச்சதைக் கூட நான் மன்னிச்சிடுவேன்... ஆனா நீ லவ் பண்ணற பையனோட தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணனும் எனச் செக் வச்ச அப்புறம் நான் கெட்டவனா மாறிடுவேன்...” என்ற ஸ்ரீராம், ஸ்பீக்கர் மோடிலிருந்து மாற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“அதெல்லாம் பழைய டெக்னிக் அண்ணா... புது ட்ரென்ட் என்ன தெரியுமா? அவரோட தங்கச்சிக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை நீங்களே பார்த்துக் கல்யாணம் செஞ்சு வச்சிடுங்க...” என்றதும், “இதுக்குப் பழைய டெக்னிக்கே தேவலாம்” என்றான் ஸ்ரீராம்.

“என்ன அண்ணா, எனக்காக இதைக் கூடச் செய்ய மாட்டீங்க?” என அவள் ராகத்துடன் இழுக்க, “லவ் பண்ணறதைக் கூட என்கிட்டேச் சொல்லலை... இதுல டயலாக் வேற... உனக்கு வீட்ல பார்க்கிற மாப்பிள்ளை தான்...” என்றான்.

“டோன்ட் வொரி... என் காதலுக்காக உங்களை எதிலும் லாக் பண்ணமாட்டேன்... ப்ராமிஸ்... அவரோட தங்கைக்கு ஏற்கனவே கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு....” என்றாள் அவசரமாக.

“அப்போ மீ எஸ்கேப்... சரி... டீடைல்ஸ் சொல்லு நான் விசாரிக்கிறேன்...”

“ம்ஹூம்... அவர் உங்களைத் தேடி வருவார்... இப்போ அவரைப் பத்திச் சொன்னா நீங்க உடனே விசாரிச்சு ஒரு முடிவுக்கு வந்திருவீங்க... அவர் வந்து பேசட்டும்... உங்களுக்கு அவரைப் பிடிக்கும்” என்றாள்.

“’பில்ட் அப்’ எல்லாம் பயங்கரமா இருக்கு... பார்க்கலாம்... பார்க்கலாம்... மச்சான் என்ட்ரி எப்படி இருக்குனு…” என ஸ்ரீராம் சொல்ல, “அதெல்லாம் சும்மா ‘ஆட்டம் பாம்’ அளவுக்கு அதிரும்...” என்றாள் ஸ்வேதா.

“ஆட்டம் பாமோ, ஆட்டமில்லாத பாமோ பார்க்கலாம்... அவர் வீட்ல எப்படி? ஒத்துக்குவாங்களா?” என ஸ்ரீராம் ஓர் அண்ணனாக அக்கறையுடன் வினவ, “ஒத்துக்குவாங்கன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“என்ன ஸ்வேதா இது? உப்பு, சப்பில்லாம ஒரு லவ் ஸ்டோரி... இந்த அண்ணன் ஹீரோ மாதிரி வந்து ஒரு சண்டை... சில பல பன்ச் டயலாக்... எனப் பேசி உங்க காதலைச் சேர்த்து வைக்கலாம் என நினைச்சேன்”

“காமெடியனுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது... என் ஃபிரெண்ட்ஸ் உங்களுக்கு ‘ப்ளேட்’ன்னு பட்டப் பெயர் வச்சது மறந்திடுச்சா?” என அவள் அண்ணனை வம்புக்கு இழுக்க,

“அவங்க லவ்வை ஏத்துக்கலைன்னு பொறாமை...” என ஸ்ரீராம் சொல்ல, “அப்படி வேற நினைப்பு இருக்கா?”எனக் கிண்டலாக நொடித்தாள்.

“ஸ்வேதா...”என அலறியவன், “கதை வேணா சாதாரணக் கதையா இருக்கலாம்... ஆனா, நான் வித்தியாசமான ஹீரோ தெரிஞ்சிக்கோ...” என்றான்.

“அப்படிங்களா? எப்படி?”

“ம்ம்ம்... அது சொல்ல மாட்டேன்... செயல்ல காட்டறேன்... வெயிட் அன்ட் சீ...” என அழைப்பை வைத்துவிட்டு, “அம்மா, அவங்க வீட்டில வந்து பேசட்டும்... அப்புறம் பார்க்கலாம்...” என்றான்.

“இப்போ, குடிக்க ஏதாவது கொடுங்க? லைட்டாப் பசிக்கிற மாதிரி இருக்கு...” எனத் தொடர்ந்து சொல்ல, “உதை வாங்குவ... இப்போ தானே சாப்பிட்ட.... அது என்ன ஏதாவது குடிக்க? பால் மட்டும் தான் இந்நேரத்துக்குக் குடிக்கணும்....” என அவர் சமயலறைக்குச் சென்றார்.

ஸ்ரீராமுக்கு வெறும் பாலைக் குடிக்கப் பிடிக்கவே பிடிக்காது. என்னவோ பால்டாயிலைக் கொடுத்ததைப் போல் முகத்தை எல்லாத் திசைகளிலும் திருப்புவான்.

ஆகையினால் எவ்வளவு நேரமானாலும் இரவு அருந்தும் பாலை மட்டும் மகனுக்கு அவர் கையாலேயே தருவார். வளர்கின்ற பையனல்லவா? குடித்துவிட்டானா என்றும் உறுதி செய்து கொள்வார் சரோஜா.

தனக்காக அன்னை காத்திருப்பார் என ஸ்ரீராமுக்குப் புரிந்ததால் இரவு முடிந்த வரையில் வீட்டுக்குச் சற்று விரைவிலேயே வந்துவிடுவான்.

சரோஜா நகர்ந்ததும், “சாரிப்பா.... உன் இலட்சியத்தை நான் தவிடு பொடியாக்கிட்டேன்... இப்போ உன் அம்மாவும் உனக்குப் பிடிச்சப் பெண்ணைக் கல்யாணம் பண்ண விடமாட்டா போல” என அதுவரையில் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த தந்தை பார்த்தசாரதி இழுத்து, இழுத்துப் பேசியதைப் புரிந்து கொண்ட ஸ்ரீராம்,

சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு, “ஒண்ணு கவனிச்சீங்களா... அம்மாவுக்குப் பிடிச்ச பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொன்னேன்... அவங்க பார்க்கிற பொண்ணை இல்லை... எல்லாம் எனக்குப் பிடிச்சப் பெண்ணை அம்மாவுக்குப் பிடிச்சவளா மாத்திடலாம்...” எனக் கண்ணடித்தான்.

அதே சமயத்தில் அவனுக்குக் கைபேசியில், ‘ஹ ஹ ஹா...’ என வீட்டுக்கு வருவதற்கு முன்னால் மதுமிதாவுக்கு அனுப்பிய செய்திக்குப் பதில் வந்தது. கூடவே,

‘மின்னல்கள் கிளுக்கிச் சிரித்தோட

மேகங்கள் மோதி விளையாட

பூமிக்குத் தூறல்களைத்

துளித்துளியாய் தூதுவிடுவது ஏனாம்?

சேர்ந்துக் கூத்தாட...’ என அவன் கவிதை என அனுப்பியதை மெருகேற்றி உண்மையிலும் கவிதையாக்கி அனுப்பியிருந்தாள்.

அந்தச் செய்தியைப் பார்த்தவாறே, ‘ஆயுசு நூறு... பரவாயில்லை கவிதை, கவிதை மாதிரியே இருக்கு’ என முணுமுணுத்தவன்,

“குட் நைட் அப்பா... காலையில் நேரத்துல போகணும்” எனச் சமையலறையை நோக்கி நடந்தான். எல்லாம் அன்னைக்கு ‘ஐஸ்’ வைத்துவிட்டுச் செல்லவே.

மகனின் உற்சாகத்தில் தானும் மலர்ந்தார் பார்த்தசாரதி. இன்று வரையிலுமே அவருக்கு ஒரு மனக்குறை இருக்கத் தான் செய்கிறது. படித்து முடித்து, இந்தியக் காவல் துறையில் சேர்வதற்கு டெல்லி சென்று தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

அந்தச் சமயத்தில் அவருக்கு உடல்நலமில்லாமல் போக, அவரின் ஒரு பக்க உடலின் பாகங்கள் முழுவதும் செயலிழந்தன... பல மாதங்கள் சிகிச்சையின் பலனாகப் பார்த்தசாரதி முன்போல் படுத்த படுக்கையில் இல்லாவிட்டாலும் இன்னுமே வீல் சேரில் தான் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீராம் அன்றே தன் கனவுகளை எல்லாம் உதறிவிட்டு, தந்தை ஆரம்பித்த தொலைக்காட்சியின் நிர்வாகத்தைக் கையிலெடுத்துக் கொண்டான்.

தன் உயிர் தோழன், அர்ஜூன் எத்தனையோ சொல்லிப் பார்த்தும் இந்தியக் குடிமைப் பணிக்கான பரீட்சையை எழுதவில்லை. “எழுதி, அடுத்த ரவுண்டுக்குப் போனா அப்புறம் மனசு மாறிடுவேன்...” எனச் சொல்லி, அவன் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டான்.

“டேய்... வந்து தொழிலைக் கவனின்னு அப்பா சொல்லியிருந்தாக் கூட எதிர்த்திருப்பேனோ என்னவோ? ஆனால் அவர் எதுவும் சொல்லலை... அப்பா ஆசையா வளர்த்த தொழில்டா... பல கோடிகள் முதலீடு செய்த தொழில்...

முதல்ல வீட்டைக் கவனிக்கிறேன்.. அப்புறம் நாட்டைத் திருத்தறேன்...” என அர்ஜூனிடம் பேசிச் சமாதானப்படுத்தியவன், தோன்றிய சமூக அக்கறையை வேறு விதத்தில் காட்டிக் கொண்டிருக்கிறான்.

 

இதுவரையில் இது தான் வேண்டும் என்று பிடிவாதம் கொண்டு எதையும் கேட்டதில்லை. கிடைத்ததைப் பிடிவாதமாகத் தனக்குப் பிடித்ததாக மாற்றிக் கொள்ளும் வல்லமை படைத்தவன்.

சொந்தத் தொலைக்காட்சியல்லவா? அவனுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை. அதனால் சமூக நலனில் அக்கறை கொண்டு நிறைய நிகழ்ச்சிகள் இடம் பெறும். அதற்காக ரம்பம் போடுவார்கள் என்றும் சொல்ல முடியாது.

ஸ்ரீராம் வந்த பின்னர் அவர்கள் தொலைக்காட்சி ஒரு தனி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

வேலையில் அப்படித் திறமையைக் காட்டினான் என்றால் வீட்டிலுள்ளவர்கள் உயிர்ப்புடன் நடமாடுவதற்குப் பாடுபட்டான். அவர்கள் இப்படிக் கலகலப்பாக இருப்பதற்குக் காரணம் ஸ்ரீராம்.. ஸ்ரீராம் மட்டுமே.

தந்தைக்கு இப்படி ஆகிவிட்டதே என அழுது புரண்ட அன்னையையும், தங்கையையும், “அழுது ஆகப்போவது ஒன்றுமில்லை” எனப் பேச்சால் மாற்றி,

“விலை மதிப்பற்ற பொக்கிஷமான உயிர் இருக்கையில் வேறென்ன வேண்டும்?” எனத் தேற்றி, எதையும் எதிர்கொள்ளலாம் என்ற மனப்பக்குவத்தை வர வைத்திருந்தான்.

எதற்குமே கோபம் கொள்ளாத அவனின் கலகலப்பான பேச்சும் அதற்குத் துணைபுரிய, உடனடியாக அதிலிருந்து மீண்டுவிட்டனர்.

மகனைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்த பார்த்தசாரதியின் முகத்தில் அப்பட்டமான பெருமிதம் பொங்கி வழிந்தது.